தற்போது நடைபெற்று வரும் சையத் முஸ்டாக் அலி தொடரில் திரிபுரா அணிக்கு எதிராக குஜராத் அணி வீரர் உர்வில் படேல் 28 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்து இந்திய அளவில் மற்றும் உலக அளவில் இரண்டு சாதனைகள் படைத்திருக்கிறார்.
இந்த ஆண்டு இந்திய உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்டாக் அலி தொடர் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் இன்று ஒரு போட்டியில் குஜராத் மற்றும் திரிபுரா அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில்தான் குஜராத் அணிக்காக விளையாடிய உர்வில் படேல் டி20 கிரிக்கெட்டில் இரண்டு மெகா சாதனைகளை உருவாக்கி இருக்கிறார்.
ரிஷப் பண்ட் சாதனை உடைந்தது
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திரிபுரா அணி 155 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 58 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. குஜராத் அணியின் உர்வில் படேல் 28 பந்தில் அதிரடி சதம் அடித்து, 35 பந்துகள் சந்தித்து ஆட்டம் இழக்காமல் 7 பவுண்டரி மற்றும் 12 சிக்ஸர்கள் உடன் 113 ரன்கள் குவித்தார்.
இந்திய நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் 2018 ஆம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேஷ் அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் 32 பந்துகளில் சதம் அடித்தார். இந்திய வீரர் அடித்த அதிவேக டி20 சதமாக இது பதிவானது. தற்பொழுது இதை உர்வில் படேல் முறியடித்து இருக்கிறார். மேலும் உலக அளவில் இது டி20 கிரிக்கெட்டில் இரண்டாவது அதிவேக சதமாக அமைந்திருக்கிறது. முதல் இடத்தில் சைப்ரஸ் அணிக்கு எதிராக எஸ்ட்டோனியா அணியின் ஷாகில் சவுகான் 27 பந்தில் சதம் அடித்தது இருக்கிறது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் விலை போகவில்லை
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி உர்வில் படேலை அடிப்படை விலையான இருபது லட்ச ரூபாய்க்கு வாங்கி இருந்தது. ஆனால் அவருக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் 14 போட்டிகள் பெஞ்சில் அமர்ந்திருந்தார். மேலும் நடந்து முடிந்த 2024 ஐ பி எல் மெகா ஏலத்தில் அவரை மீண்டும் எந்த அணியும் வாங்க முன் வரவில்லை.
குஜராத்தைச் சேர்ந்த 26 வயதான வலதுகை பேட்ஸ்மேன் உர்வில் படேல் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட்டிலும் அருணாச்சல் பிரதேஷ் அணிக்காக 41 பந்தில் அதிரடி சதம் அடித்திருக்கிறார். இந்த வகையில் முதல் இடத்தில் 40 பந்தில் பரோடா அணிக்காக மகாராஷ்டிரா அணிக்கு எதிராக யூசுப் பதன் அடித்த சதம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 5.20 கோடி.. நான் கனடாவுக்கு போய் இருப்பேன்.. மும்பை இந்தியன்ஸ்தான் தடுத்தது – நமன் திர் பேட்டி
மேலும் உர்வில் படேல் டி20 கிரிக்கெட்டில் 44 டி20 போட்டியில் 23.52 ஆவரேஜில் 1 சதம் மற்றும் 4 அரை சதங்களுடன், 164.11 ஸ்ட்ரைக் ரேட்டில் 988 ரன்கள் எடுத்திருக்கிறார். ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டிருக்கும் உள்நாட்டு அன்கேப்டு பேட்ஸ்மேன்கள் யாராவது காயம் அடைந்தால் இவருக்கு ஐபிஎல் அணியில் இடம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.






