இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி வரும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகளை படைத்திருக்கிறது.
மிகக் குறிப்பாக இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் இந்த ஆண்டு முழுவதுமே மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக அரை சதம் அடித்திருந்தார். கொஞ்சம் கவனம் குறைவாக அந்த நேரத்தில் இருந்ததால், ஒரு சதம் தவறிவிட்டது என்று சொல்லலாம்.
இந்த நிலையில் இன்று அதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தியிருக்கிறார். இது அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் ஆறாவது சதமாக அமைந்திருக்கிறது.
மேலும் ஆசியக் கோப்பையின் இரண்டாவது சுற்று போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக பேட்டிங் செய்வதற்கு கடினமான ஆடுகளத்தில் சதம் அடித்திருந்தார். மேலும் நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் சுப்மன் கில்தான் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேனாக இருந்தார்.
இன்று சுப்மன் கில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அடித்த சதத்தின் மூலம் குறைந்த இன்னிங்ஸ்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் 6 சதங்கள் அடித்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். இதற்கு அவருக்கு 35 இன்னிங்ஸ் தேவைப்பட்டு இருக்கிறது. ஷிகர் தவன் 46, கேஎல் ராகுல் 53, விராட் கோலி 61, கம்பீர் 68 இன்னிங்ஸ் எடுத்திருக்கிறார்கள்.
மேலும் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்து அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்த இந்திய வீரர் என்கின்ற சாதனையை சுப்மன் கில் தற்போது பெற்றிருக்கிறார். கில் ஸ்ட்ரைக் ரேட் 105.3. வீரேந்திர சேவாக் 105.1. விராட் கோலி 102.55. சச்சின் 102.15 என்று இருக்கிறார்கள்.