மகேந்திர சிங் தோனி தலைமையில் 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரைக் கைப்பற்றிய அணியில் இடம்பெற்று இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை வீசிய ஜோகிந்தர் சர்மாவை யாராலும் மறந்திருக்க முடியாது. தற்போது அவர் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்த பதவியில் நீண்ட காலம் நீடிக்க முடியாது என வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
இந்திய அணி முதன் முதலில் தென் ஆப்ரிக்காவில் ஐசிசி நடத்திய டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றியது. பாகிஸ்தானுக்கு அந்த உலகக் கோப்பை தொடரை பெற்று தந்துவிட இறுதிவரை களத்தில் நின்று மிஸ்பா உல் ஹக்கடுமையாக இந்திய அணிக்கு அச்சுறுத்தல் கொடுத்து கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராத விதமாக ஹர்பஜன் சிங் பந்து வீச வேண்டிய இடத்தில் ஜோகிந்தர் சர்மா பந்துவீச அதை தவறாகக் கணித்து விளையாடிய மிஸ்பா ஸ்ரீஷாந்த் இடம் கொடுக்க இந்தியா 24 வருடங்கள் கழித்து ஒரு உலகக்கோப்பை தொடரை கைப்பற்றியது.
பரபரப்பான இந்த போட்டியில் அந்த ஓவரை வீசிய ஜோகிந்தர் சர்மா பின் நாட்களில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு காவல் துறையில் இணைந்து தற்பொழுது பெரிய பதவியில் இருந்து வருகிறார். மேலும் அவர் நேற்று மகேந்திர சிங் தோனியை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் கம்பீர் பற்றி பேசிய ஜோகிந்தர் சர்மா “கவுதம் கம்பீர் அணியை நிர்வகிக்கக் கூடியவர். ஆனாலுமே அவரால் இந்திய அணியில் பயிற்சியாளர் பொறுப்பில் நீண்ட காலம் இருக்க முடியாது. இதற்கு முக்கிய காரணம் கம்பீர் சொந்த முடிவுகளை எடுக்கக் கூடியவர். இதனால் அவருக்கு ஒரு வீரருடன் கருத்து வேறுபாடு வரலாம். நான் விராட் கோலி குறித்து கூறவில்லை. பல நேரங்களில் கம்பீர் எடுக்கும் முடிவுகள் பலருக்கு பிடிக்காமல் போகும்”
இதையும் படிங்க : 56 இன்னிங்ஸ் குறைவு.. சச்சினின் 18 வருட சாதனை.. கோலி இன்று உடைப்பாரா?.. அருமையான வாய்ப்பு
“கம்பீர் எப்பொழுதும் நேர்மையாக வேலையை செய்வார். அவர் யாரிடத்திலும் எதற்காகவும் போய் நிற்க மாட்டார். அவருக்கு முகஸ்துதி செய்யும் பழக்கம் கிடையாது. அவர் செயல்பட கூடியவர்களுக்கு கிரெடிட் கொடுப்பவர். அவர் தன்னுடைய வேலையை மிகவும் அர்ப்பணிப்புடனும் நேர்மையாகவும் செய்யக்கூடியவர்” என்று கூறி இருக்கிறார்.






