உலகக் கோப்பைக்காக ஜிம்பாப்வே தொடர் வரைக்கும் இதத்தான் செய்யப் போறேன்.. பவுலர்கள் ரெடி ஆகிக்கோங்க – கம்பீர் அறிவுறுத்தல்

0
0

​மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆக்கிப் நபியின் அறிமுகத்திற்குப் பிறகு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது மற்றும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் திட்டங்கள் குறித்து தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார்.

​அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை முன்னிட்டு, இந்திய அணி நிர்வாகம் இளம் வீரர்களுக்குத் தொடர்ச்சியாக வாய்ப்பளித்து சோதித்து வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே ஆக்கிப் நபி மற்றும் நமன் தீர் போன்ற புதுமுக வீரர்கள் இந்திய ஒருநாள் அணியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.

- Advertisement -

​இதுகுறித்து கௌதம் கம்பீர் பேசும்போது “இன்று ஆகிப் நபிக்கு வாய்ப்பு கிடைத்தது போல, வரவிருக்கும் ஜிம்பாப்வே தொடர் வரையிலாவது மற்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பளித்து, இந்த ஃபார்மட்டில் அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்க முயற்சிப்போம். தொடரைக் கைப்பற்றிய பிறகு நடக்கும் போட்டியில் ஆகிப்பிக்கு வாய்ப்பளித்திருக்கலாம், ஆனால் அந்தப் போட்டியில் தொடரை வெல்ல வேண்டும் என்ற பிரஷர் இருக்காது. உலகக்கோப்பை என்பது முழுக்க முழுக்க பிரஷர் நிறைந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம்” என்று கூறி இருக்கிறார்.

​அவர் மேலும் கூறும்போது “கிரிக்கெட் அப்படி மாறப்போவதில்லை, ஆனால் பிரஷர் மட்டுமே வித்தியாசமாக இருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை வருவதால், பவுலர்களை அழுத்தமான சூழ்நிலைகளில் ஈடுபடுத்த விரும்புகிறோம். முதல் பத்து ஓவர்களில் குர்னூர் பிராரை பந்துவீச வைப்பதும், டெத் ஓவர்களில் வீச வைப்பதும் முக்கியமானது. மக்கள் அவரின் எக்கானமி பற்றிப் பேசலாம், ஆனால் இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் அவர் எவ்வளவு அதிகமாகப் பந்துவீசுகிறாரோ, அது இந்தியக் கிரிக்கெட்டிற்கு அவ்வளவு நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அவர் “அவரைக் கொண்டு மிடில் ஓவர்களில் மட்டுமே பந்துவீசி நல்ல அனாலிசிஸ் அல்லது புள்ளிவிவரங்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால், இதுபோன்ற கடினமான தருணங்களில் அவர்களுக்கு வாய்ப்பளிப்பதே இந்தியக் கிரிக்கெட்டிற்குச் சிறந்தது” என்று கூறி முடித்தார்.

- Advertisement -