மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்த போதிலும், அவர் தனது சிறந்த ஃபார்மில் பேட்டிங் செய்யவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
கவுகாத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளில் ரோஹித் சர்மா ஒரு சதத்துடன் 133 ரன்கள் குவித்து நல்ல சராசரியை வைத்திருந்தாலும், களத்தில் அவரது பேட்டிங் அணுகுமுறையில் சில மாற்றங்களை காண முடிவதாக அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய அணியின் இந்த சிறப்பான வெற்றிக்குப் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசும்போது “ரோஹித் சர்மா தனது மிகச்சிறந்த ஃபார்மில் பேட்டிங் செய்கிறாரா என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்வேன். ஏனெனில் ஸ்டம்பை நோக்கி வரும் லென்த் பந்துகளில் வழக்கமாக அவர் அடிக்கும் பிக்கப் ஷாட்களை இந்த போட்டியில் தவறவிட்டார். தற்போது அவர் அதிகமாக பிக்கப் புல் ஷாட்களை அடிக்க முயற்சி செய்கிறார், அதனால்தான் அவர் தனது உச்சகட்ட ஃபார்மில் இல்லை என்று கூறுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து ரோஹித் சர்மாவின் கொண்டாட்டம் குறித்து அஸ்வின் பேசும்போது “தனக்கு எதிராக எழுந்த கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை ரோஹித் ஒவ்வொன்றாக உடைத்தெறிந்து வருகிறார் என்பதை உணர்த்தவே அவர் அப்படி கொண்டாடினார். 2027 உலகக்கோப்பையில் அவரால் விளையாட முடியாது என்று அனைவரும் கூறிய நிலையில், அதை அவர் தகர்த்து வருகிறார். ஒரு குழந்தை கொண்டாடுவதைப் போல இருந்த அந்த செலிப்ரேஷனை நான் மிகவும் ரசித்து பார்த்தேன். ரோஹித் சர்மாவின் இந்த இன்னிங்ஸ் மிகவும் சிறப்பானது மற்றும் நம்பமுடியாதது, தான் என்ன செய்கிறோம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்” என்று கூறி இருக்கிறார்.
ரோஹித் சர்மா சர்வதேச அளவில் மீண்டும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக விமர்சகர்களின் கருத்துக்களை தகர்த்து களத்தில் அவர் ரன்களை குவித்து வருவதால், வரும் போட்டிகளிலும் அவரது பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.






