இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் களமிறங்கி ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்தார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஸ்ரேயாஸ் ஐயரின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையில் பெரும்பாலான ஆட்டங்களில் இந்திய அணிக்கு மிடில் வரிசையில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை ஸ்ரேயாஸ் ஐயர் வெளிப்படுத்தி இருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மட்டும் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதற்குப் பிறகு இந்திய அணியின் அறிவுரையை ஏற்காத நிலையில் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட மறுத்து ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தினார்.
அதற்குப் பிறகு விஷயம் சர்ச்சையான நிலையில் உடனே ஸ்ரேயாஸ் ஐயர் அதனை சரி செய்து மீண்டும் உள்நாட்டு தொடரில் விளையாடி தனது தவறை சரி செய்து கொண்டார். இந்த சூழ்நிலையில் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது. சமீபத்தில் தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் விராட் கோலிக்கு பதில் களம் இறங்கினாலும் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்து அடுத்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலிக்கு பதிலாகவே களம் இறக்கப்பட்டேன் என்று ஐயர் வெளிப்படையாக பேசிய நிலையில் அப்போதே இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மீது சில விமர்சனங்கள் இருந்தது. இந்த சூழ்நிலையில் அகமதாபாத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பிறகு கௌதம் கம்பீர் ஸ்ரேயாஸ் அய்யர் குறித்த தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க:என் திட்டம் தெரியாம பேசாதீங்க.. நாங்க தோத்ததுக்கு உண்மையான காரணமே இதான் – இங்கி பயிற்சியாளர் பதிலடி
இதுகுறித்து கம்பீர் கூறும் பொழுது “ஆஸ்திரேலியாவில் ஜெய்ஸ்வால் நல்ல ஃபார்மில் இருந்ததால் அவருக்கு முதல் ஆட்டத்திலேயே வாய்ப்பு கொடுக்க விரும்பினோம். அவர் என்ன மாதிரியான இன்னிங்ஸ் விளையாட விரும்புகிறார் என்பதை பார்க்க விரும்பினோம். இருப்பினும் ஒரு ஆட்டத்தை வைத்து ஒரு வீரரை மதிப்பிட முடியாது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் முக்கியமான வீரராக இருப்பார் என்பது எங்களுக்கு எப்போதும் தெரியும். அவர் 50 ஓவர் உலகக் கோப்பையில் நான்காவது இடத்தில் களமிறங்கி என்ன செய்திருக்கிறார் என்று பார்த்தால் புரியும். அவர் இந்திய அணிக்கு முக்கியமான வீரர் தான்” என பேசி இருக்கிறார்.






