இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் பிளவு எதுவும் கிடையாது எனவும், மேலும் அபிஷேக் ஷர்மா அடித்துள்ள சதம் குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்திருக்கிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி ஒரு போட்டியை மட்டுமே வென்ற நிலையில் இந்திய அணி 4 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியது. இந்த தொடர் முழுக்க இந்திய அணி அச்சமற்ற கிரிக்கெட் முறையில் விளையாடியது.
இந்திய அணியை சூழ்ந்த விமர்சனங்கள்
இந்திய அணி உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்ததும், ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடரை இழந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனதும் இந்திய அணியை சுற்றிலும் நிறைய விமர்சனங்களை கொண்டு வந்தது. மேலும் இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் பிளவு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.
தற்போது இது குறித்து பேசி இருக்கும் பயிற்சியாளர் கம்பீர் கூறும் பொழுது “அணியில் உள்ள ஒருவருக்கொருவர் சேர்ந்து நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். இதைவிட முக்கியமாக ஒரு சில மாதத்திற்கு முன்னால் பெரிய வதந்திகள் அணியை சுற்றிப் பரவியது. இதுதான் இந்திய கிரிக்கெட். முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இல்லாத போது இது நடக்கும். இந்திய அணி வெற்றி பெற தொடங்கும் பொழுது இந்த விஷயங்கள் அப்படியே மாற ஆரம்பித்து விடும்”
அபிஷேக் ஷர்மா சிறந்த சதம்
“இவர்கள் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பான வீரர்கள். இவர்கள் தங்களை மகிழ்வித்து கொள்கிறார்கள். தங்களுடைய நாட்டிற்காக விளையாட விரும்புகிறார்கள். மேலும் இவர்கள் அனைவருக்கும் இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களையும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான அர்த்தம் என்னவென்று நன்றாக தெரியும்”
இதையும் படிங்க : யுவராஜ் சிங் அபிஷேக் சர்மாவுக்கு முதல் முறையாக செய்த செயல்.. ஆச்சரியமடைந்த இளம் வீரர்
“நாங்கள் அச்சமற்ற முறையில் விளையாடுவோம். நாங்கள் இதை முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்புகிறோம். அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்களை நாங்கள் ஆதரிக்க நினைக்கிறோம். இந்தச் சிறுவர்களிடம் நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இவர்களில் பலர் அச்சமற்று விளையாடும் கிரிக்கெட் அணுகுமுறையின் தத்துவத்தை நம்புகிறார்கள். மணிக்கு 140 முதல் 150 கிலோமீட்டர் வரையில் தொடர்ந்து வேகமாக வீசும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறந்த டி20 சதத்தை இதற்கு முன் நான் பார்த்ததில்லை” என்று கூறியிருக்கிறார்.