தாம் விளையாடிய பயிற்சியாளர்கள் கீழ் கம்பிர்தான் மிக சிறந்தவர் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கம்பீரின் பயிற்சியில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்தில் சந்தித்த தோல்விகளால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், குர்பாஸ் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய குர்பாஸ், “அவர் நான் இதுவரை சந்தித்த சிறந்த மனிதர் மற்றும் பயிற்சியாளர். அவர் எப்படி விஷயங்களை அணுகுகிறார் என்பதை நேசிக்கிறேன். உங்கள் நாட்டில் 140 கோடி மக்கள் இருந்தால், அதில் 2-3 மில்லியன் பேர் மட்டுமே அவருக்கு எதிராக இருப்பார்கள். மீதமுள்ளவர்கள் கௌதம் சாருடனும், இந்திய அணியுடனும் தான் இருக்கிறார்கள்.”
“அவர்களைப் பற்றி பேசுவதே அர்த்தமில்லை. இதுவரை என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் சந்தித்த சிறந்த பயிற்சியாளர், மனிதர், வழிகாட்டி அவர்தான். சமீபத்தில் இந்தியா ஒருநாள் சாம்பியன்ஸ் டிராபி, டி20 ஆசியாக் கோப்பை வென்றது. பல தொடர்களையும் வென்றிருக்கிறது.ஒரு தொடருக்காக மட்டும் அவர்களைக் குற்றம் சாட்ட முடியாது” என்று குர்பாஸ் தெரிவித்தார்.
2024 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டராக இருந்த கம்பீரின் அணுகுமுறை அணிக்கு எவ்வளவு உதவியது என்பதையும் குர்பாஸ் கூறியுள்ளார். “அவர் தன் வேலையை எப்படிச் செய்கிறார் என்பதை நேசிக்கிறேன். நல்ல சூழலை உருவாக்கினால் எப்போதும் முதலிடத்தில் இருப்போம். அவர் எங்களுக்கு மிக எளிதான, அழுத்தமில்லாத சூழலை உருவாக்கினார். கட்டாயப்படுத்தவோ கண்டிப்பாகவோ இல்லை.”
” அதனால்தான் நாங்கள் கோப்பையை வென்றோம். அவர் கண்டிப்பவர் இல்லை, ஆனால் ஒழுக்கமானவர். ஒழுக்கத்துக்கு எதிராக ஏதாவது நடந்தால்தான் மட்டுமே கண்டிப்பார்” என்று குர்பாஸ் கூறினார். கம்பீரின் பயிற்சியில் இந்தியா இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10-இல் தோல்வியடைந்துள்ளது.
இதையும் படியுங்க: கோலி, ரோகித்துக்கு நடக்கும் அநியாயம்.. இனி பேச்சே கிடையாது, வீச்சு தான்.. சடகோபமன் ரமேஷ் பாராட்டு
டெஸ்ட் அணியில் தொடர்ந்து மாற்றங்கள் செய்வதை ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் விரும்பவில்லை. சமீபத்தில் நடந்த இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா வெள்ளையடிக்கப்பட்டது. தற்போது இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 8 போட்டிகள் கொண்ட வெள்ளைப் பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடர் டிசம்பர் 19-ஆம் தேதி முடிவடையும்.