ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 போட்டியில் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, இந்திய ஏ அணி கேப்டன் திலக் வர்மா பேசிய கருத்து குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான் ஏ நிர்ணயித்த 313 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய ஏ அணி 265 ரன்களுக்கு ஆட்டமிழந்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. திலக் வர்மா 149 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தாலும், ஷாபாஸ் அகமது ஆட்டமிழந்த பிறகு மற்ற பேட்டர்கள் நிலைக்கவில்லை.
ஆட்டத்தின் நடுவில் விக்கெட்டுகள் சரிந்தபோது, மறுமுனையில் இருந்த பேட்டர் மீது அழுத்தம் கூடியதை ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டினார். அனுபவம் குறைந்த கேப்டனாக திலக் வர்மா செயல்பட்டதாக அவர் கருதுகிறார்.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது “நீங்கள் கேப்டனாக இருக்கும்போது, குறிப்பாக எதிரில் பாகிஸ்தான் அணி இருக்கும்போது, நான்தான் தவறு செய்தேன் என்று சொல்ல வேண்டும், மற்றவர்களைக் குறை கூறுவதுபோல் பேசக் கூடாது, ஒருவேளை அவர் இளம் கேப்டனாக இருப்பதால் இப்போது சற்று முதிர்ச்சி குறைந்த கேப்டனாக இருக்கலாம். அனுபவம் குறைவாக இருப்பதால் இப்படிப் பேசியிருக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது “சில நேரங்களில் பெரிய இலக்கைத் துரத்தும்போது விக்கெட்டுகள் விழுவதால் வேகமாக அடிக்க முடியாமல் போகலாம், இன்னிங்ஸை ஆழமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மறுமுனையில் ஒருவர் 34 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருக்கும்போது நீங்கள் 34 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்தால், அந்த 60 ரன்கள் எடுத்த பேட்டர் எல்லா ரன்களையும் தானே எடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தில் வேகமாக ஆடி அவுட் ஆகிவிடுவார், அபிஷேக்குக்கு அதுதான் நடந்தது, எனவே திலக் வர்மா அதற்கும் சிறிது பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.