தொடர்ந்து சொற்ப ரன்களில் வெளியேறும் கெய்க்வாட் ; என்னதான் ஆனது அவருக்கு ? கேப்டன் ஜடேஜாவின் கருத்து

0
145
Ravindra Jadeja about Ruturaj Gaikwad

ஐ.பி.எல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவரை, இந்திய அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கான எதிர்கால துவக்க ஆட்டக்காரராகப் பார்க்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். அந்தளவிற்கு இவரது பேட்டிங் தரமானதாகவும் புத்திசாலித்தனமாகவும் மிளிரும் ஒன்றாய் இருக்கிறது!

உள்நாட்டு ஒருநாள் போட்டி தொடரான விஜய் ஹசாரே தொடரில், மகாராஷ்ட்ர அணிக்காக துவக்க ஆட்டக்காரராகக் களம் கண்டு, ஆறு ஆட்டங்களில் இவர் குவித்திருந்தது, நான்கு சதங்களோடு 606 ரன்கள்! இதனால் தென்ஆப்பிரிக்கா அணியுடனான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இவருக்கு இடமும் கிடைத்தது. ஆனால் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை!

நேர்மையாக ரோகித்சர்மா இடம்பெறாத அந்தத் தொடரில் இவர்தான் துவக்க ஆட்டக்காரராகவும் களம் கண்டிருக்க வேண்டும். ஏனென்றால் ஒருநாள் போட்டிக்கான மாற்றுத் துவக்க ஆட்டக்காரராய் இவரைத்தான் இந்திய கிரிக்கெட் தேர்வாளர்கள் பார்க்கிறார்கள். ஆனால் இருபது ஓவர் போட்டிகளுக்கான வீரராய் இந்திய கிரிக்கெட் தேர்வாளர்கள் பார்க்கும் வெங்கடேசிற்குதான், அணித்தலைவர் பயிற்சியாளர் ராகுல்”கள்” வாய்ப்பு தந்தனர்!

மிக அற்புதமான பேட்டிங் டைமிங்கும், புல் (pull) மற்றும் “வி”யில் ஆடும் அபாரமான இவரது பேட்டிங் பாணியும், களத்தில் நின்றுவிட்டால் ரன்களை அனாசயமாகக் கொண்டுவரும். ஆனால் இவருக்கு ஐ.பி.எல் தொடரின் ஆரம்பம் என்றாலே ஏழாம் பொருத்தமாகத்தான் இருந்து வருகிறது.

ஐ.பி.எல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான ஆண்டாக அமைந்த 2020-ஆம் ஆண்டில்தான், இவருக்கு ஆடும் முதல் வாய்ப்பு கிடைத்தது. தான் சந்தித்த முதல் பந்திலேயே அந்தப் போட்டியில் ஆட்டமிழந்தார். அடுத்த இரண்டு போட்டிகளில் 5 [10], 0 [5]] என்று நடையைக் கட்டினார். ஆனால் அதற்கடுத்த மூன்று போட்டிகளில் 65 [41], 72 [53], 62 [49] என்று, இந்திய அணிக்கு விளையாடாது தொடர்ந்து மூன்று அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்!

அடுத்த 2021 ஆம் ஆண்டும் இதேபோல் முதல் மூன்று போட்டிகளில் 5 [8], 5 [16],10 [13] என்று அதிர்ச்சியளித்து வெளியேறிவர், நான்காவது போட்டியில் 64 [42] என்று வலிமையாய் திரும்பி வந்தார். மீண்டும் இந்த வருடமும் 0 [4], 1 [4], 1[4] என்று முதல் மூன்று போட்டிகளிலும் அணிக்கும், இரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

இந்த முறையும் நான்காவது போட்டியில் எப்போதும் போல் வலிமையாய் திரும்பி வருவாரென்று இரசிகர்கள் நம்புகிறார்கள். சென்னை அணியின் கேப்டன் ஜடேஜாவும் அவர் தரமான வீரர். வலிமையாய் திரும்பி வருவார். நாங்கள் அவரைத் தொடர்ந்து ஆதரிப்போம் என்று கூறியிருக்கிறார்.

ருதுராஜின் முதல் மூன்று ஆட்டங்களில் அவரது பேட்டிங்கை பார்க்கும் பொழுது, இவரா போன வருட ஐ.பி.எல் சீசனின் ஆரஞ்ச் கேப் வாங்கியவர்?! இவரா விஜய் ஹசாரா டிராபியில் ஆறு ஆட்டங்களில் நான்கு சதங்களோடு 606 ரன்கள் குவித்தவர்?! என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது. காரணம் அவரிடம் அவ்வளவு தடுமாற்றம். மேலும் பந்தை எதிர்கொள்வதில் நம்பிக்கை தெரியவில்லை. அவர் ஆரம்பத்தில் ஆட முடியாதென்று தோன்றும் பந்துகளை வெளியே விட்டால் கூட தப்பில்லை. ஆனால் அவர் ஆடியே ஆட்டமிழக்கிறார்.

அவரது தற்போதைய பிரச்சினை தெளிவான மனநிலையும், நம்பிக்கையும்தான். மற்றபடி பேட்டிங் அடிப்படை யுக்திகளிலோ, திறமையிலோ எந்தப் பிரச்சினையும் இருப்பதாய் தெரியவில்லை. சென்னை அணியின் இரசிகர்கள், கேப்டன் ஆகியோரது நம்பிக்கைபடியே அவர் வலிமையாய் திரும்பி வருவாரென நாமும் நம்புவோம்!

இதில் ஒரு தற்செயலான சுவாரசியமான நிகழ்வு என்னவென்றால், முதல் மூன்று ஆட்டங்களில் தடுமாறி, நான்காவது ஆட்டத்தில் மீண்டுவரும் ருதுராஜ், இந்தத் தொடரின் மூன்று ஆட்டங்களிலும், தான் சந்தித்த நான்காவது பந்திலேயே ஆட்டமிழந்திருக்கிறார். தற்செயலான நிகழ்விலொரு தற்செயலான நிகழ்வு!