பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் இந்திய வீரர்களுடன் நட்பு பாராட்ட கூடாது எனவும், தாங்கள் அப்படிதான் விளையாடி வந்தோம் எனவும் அதற்கு பின்னணியில் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மொயின் கான் கூறியிருக்கிறார்.
தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. இருந்த போதிலும் இந்தியா பாதுகாப்பு காரணங்களால் அங்கு செல்லாததால் துபாயில் இந்தியா விளையாடும் போட்டி நடத்தப்படுகிறது. மேலும் இந்த இரண்டு அணிகளும் ஒரே பிரிவில் இடம் பெற்று இருப்பதால் சாம்பியன்ஸ் டிராபியில் துபாயில் விளையாட இருக்கின்றன.
எங்களுக்கு சொல்லப்பட்ட அறிவுரை
இந்த போட்டி குறித்து பேசி இருக்கும் மொயின் கான் கூறும் பொழுது “இந்தியாவுக்கு எதிராக விளையாடும் பொழுது எந்தவித வாய்ப்பையும் கொடுக்க கூடாது எனவும், அவர்களுடன் பேசக்கூட தேவையில்லை எனவும் எங்களின் மூத்தவர்கள் எங்களிடம் கூறுவார்கள். ஏனென்றால் நீங்கள் இந்திய வீரர்களுடன் நட்பாக பழகினால் அவர்கள் அதை உங்களுடைய பலவீனமாக பார்க்கிறார்கள் என்பதுதான் இதில் இருக்கும் விஷயம்”
“தற்போதைய எங்கள் பாகிஸ்தான் வீரர்கள் இதை புரிந்து கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன். களத்தில் நீங்கள் நட்பாக இருப்பது பலவீனத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மேலும் உங்களுடைய செயல் திறனில் இப்படி இருப்பதால் நீங்கள் தேவையில்லாமல் அழுத்தத்தை தாமாகவே ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்”
எங்கள் வீரர்கள் செய்வது சரியில்லை
மேலும் இது குறித்து மொயின் கான் பேசும்பொழுது ” இந்த காலகட்டத்தில் நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் போட்டிகளை பார்க்கும் பொழுது, இந்திய வீரர்கள் கிரீசுக்குள் வரும் பொழுது அவர்களுடைய பேட்களை வாங்கி எங்களுடைய பாகிஸ்தான் வீரர்கள் சரி பார்க்கிறார்கள். அவர்களுடன் தட்டிக் கொடுக்கிறார்கள். மேலும் நட்பு ரீதியாக பேசிக் கொள்கிறார்கள்”
இதையும் படிங்க : 97 ரன் கைவசம் 5 விக்கெட்.. சாய் கிஷோர் செய்த மேஜிக்.. திடீர் வெற்றி பாதையில் தமிழக அணி.. ரஞ்சி டிராபி
“இப்பொழுது எல்லாம் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் பொழுது எங்கள் பாகிஸ்தான் வீரர்களுடைய நடத்தையை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. நீங்கள் தொழில்முறை வீரர்களாக களத்திற்கு வெளியில் நட்பாக இருந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் நீங்கள் அதற்கும் சில எல்லைகளை வைத்திருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






