சூரியகுமார் தலைமையிலான டி20 இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வென்றுள்ள நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான ஒரு நாள் இந்திய அணி நாளை இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பசித் அலி இந்திய அணி குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.
ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ்
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து விராட் கோலி முழுவதுமாக கேப்டன் பொறுப்பை விட்டு விலகிய நிலையில், அவருக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் கேப்டன் பொறுப்பை ஏற்று வழி நடத்தினார். சமீபத்தில் அவரது தலைமையில் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெற்றி பெற்று சாதனை படைத்த நிலையில் டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்தார். அவருக்கு பிறகு டி20 அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியை விட்டு விலக, அவருக்கு பதிலாக பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்று வழி நடத்தினார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பசித் அலி மும்பையில் இருந்து வரக்கூடிய கிரிக்கெட் வீரர்கள் அதிக வலிமை பெறுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். டி20 மற்றும் மற்ற இரண்டு வடிவ தொடருக்கு மும்பை வீரர்களே கேப்டன்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் எனவும் சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
மும்பை வீரர்கள் வலிமையானவர்கள்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “மும்பை மக்கள் மிகவும் வலிமையானவர்களாக இருக்கிறார்கள். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருக்கிறார் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். அதேபோல டி20 போட்டிகளுக்கு சூரியகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பில் இருக்கிறார். இவர்கள் இருவருமே மும்பையைச் சேர்ந்த வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சூரியகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே ஆகியோர் கூட ரஞ்சி டிராபி கால் இறுதி போட்டியில் விளையாட இருக்கிறார்கள்.
இதையும் படிங்க:இந்திய அணி அவ்வளவு ஈஸியா ஓரம் கட்டாது.. தன்னை தயார்படுத்த இதுவே அவருக்கு சரியான நேரம் – மஞ்ச்ரேக்கர் பேட்டி
ரோஹித் சர்மா டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்து செல்லவில்லை என்றால் யாருடைய பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அது பும்ராவின் பெயராக இருக்கிறது. என் கருத்துப்படி பார்த்தால் ரிஷப் பண்ட்தான் அங்கு கேப்டனாக இருக்க வேண்டும்” என்று பசித் அலி கூறி இருக்கிறார். இந்திய அணிக்குள் சில அரசியல் சூழ்நிலைகள் இருப்பதாகவும் பசித்த அலி கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.