அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் நிலையில், மேலும் அடுத்த ஆண்டில் ஆசியக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஆசிய கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் கடுமையாக மோதி வருகின்றன. இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நடவடிக்கை பற்றி விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய அணி பாகிஸ்தான் சென்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவது இன்னும் முடிவாகவில்லை. இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட பாகிஸ்தான் செல்லாமல், இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான நாட்டில் நடத்துமாறு கேட்டுக் கொண்டு வருகிறது.
அதே சமயத்தில் பாகிஸ்தான் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் தவறாமல் வந்து கலந்து கொண்டு விளையாடி இருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என தெரிவித்து சென்று விளையாடுகின்றன. இதன் காரணத்தால் இந்திய அணி பாகிஸ்தான் செல்லாதது விமர்சனம் ஆகிறது.
இதுகுறித்து பேசி இருக்கும் பசித் அலி கூறும் பொழுது ” வெல்டன் ஜெய் ஷா. நீங்கள் ஒரு கல்லில் இரண்டு பறவைகளை அடித்திருக்கிறீர்கள். ஆனால் பசித் அலியான நான் ஒரு கல்லில் மூன்று பறவைகளை அடிக்க போகிறேன். இப்போது நான் உங்களுக்கு சில இலவச அறிவுரைகளை கூறுகிறேன். நீங்கள் ஆசியக் கோப்பையை வேறு நாட்டுக்கு மாற்ற முயற்சி செய்யுங்கள். என்னுடைய இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜெய் ஷா யு-டர்ன் அடித்து வேறுநாட்டில் நடத்த யோசிக்கலாம்.
சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்தியா பாகிஸ்தான் செல்ல வேண்டும். இல்லையென்றால் பாகிஸ்தான் இந்தியாவுக்கு வந்து ஆசிய கோப்பை விளையாடாது என ஜெய் ஷாக்கு தெரியும். மேலும் பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை தொடர் விளையாடுவதற்கு கூட இந்தியா வராது. ஹைபிரிட் மாடல் ஒரு நரகம் போன்றது. இப்படியான மாடலை சாம்பியன்ஸ் டிராபியில் ஏற்றால், ஆசிய கோப்பையிலும் ஏற்க வேண்டியதாக இருக்கும்.
இதையும் படிங்க : உலக டெஸ்ட் பைனல் 2025.. இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஆட என்ன நடக்க வேண்டும்.?.. 18 வருடம் கழித்து வாய்ப்பு.. முழு விவரம்
ஜெய் ஷா புத்தி கூர்மையானவர் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதே சமயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவரும் புத்திக் கூர்மையானவர். தற்போது பிசிசிஐ வந்து வெளிப்படையாக ஆசியக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது என அறிவிக்க வேண்டும். நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்தியா பாகிஸ்தான் வரவேண்டும் என்று கூறுவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.






