அடுத்த மாதம் துவங்க இருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் எந்த அணிகளும் வெல்லாது ஒரு குறிப்பிட்ட ஆட்களே வெல்லுவார்கள், பணம்தான் பிரதான விஷயம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி குற்றம் சாட்டி இருக்கிறார்.
ஆசியாவைச் சேர்ந்த எட்டு கிரிக்கெட் அணிகள் பங்குபெறும் ஆசிய கோப்பை தொடர் இந்த முறையை டி20 கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஒரே பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்று இருப்பதால் நிச்சயம் இரண்டு முறை மோதிக் கொள்ளும். இந்த இரண்டு போட்டிகளுக்குமே பெரிய அளவில் பணம் புழங்கும்.
பல்டி அடித்த இந்தியா
இந்திய அணி இனி எந்த விதமான தொடர்களிலும் பாகிஸ்தான் அணியுடன் விளையாடாது என பரவலாக இந்திய மட்டத்தில் பேசப்பட்டு வந்தது. நாள் வீரர்கள் விளையாடிய லெஜன்ட் லீக் தொடரிலும் அரை இறுதியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடாமல் இந்தியா வெளியேறியது.
இப்படிப்பட்ட நிலையில் இந்தியா தற்போது ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவதை உறுதி செய்திருக்கிறது. இந்தியா விளையாட உறுதி செய்த பின்னரே போட்டி அட்டவணைகள் வெளியிடப்பட்டதாக செய்திகள் வந்தன. இது இந்திய அரசியல் மட்டத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இவர்கள்தான் ஜெயிப்பார்கள்
இந்த நிலையில் கிரிக்கெட்டில் தற்பொழுது பணம் தான் முன்னிலையில் இருப்பதாகவும் கிரிக்கெட் இரண்டாவது இடத்திற்கு சென்று விட்டதாகவும், நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் எந்த அணியும் வெல்லாது, ஒளிபரப்பாளர்கள் மட்டுமே வெல்வார்கள் என்று பசித் அலி குற்றம் சாட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க : இன்று துவங்கும் துலிப் டிராபி 2025.. போட்டி அட்டவணை.. எந்த டிவியில் பார்க்கலாம்? – முழு தகவல்கள்
இதுகுறித்து பசித் அலி பேசும் பொழுது “கிரிக்கெட் வெறும் பணம் சம்பாதிக்கும் விளையாட்டாக மட்டுமே மாறி இருப்பது துரதிஷ்டவசமானது. உலகெங்கும் நடக்கும் டி20 லீக்குகளில் கிரிக்கெட் இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறது. பணமே முதலிடத்தில் இருக்கிறது. வணிக நலன்கள் தான் எப்பொழுதும் முன்னிலையில் வருகின்றன. நடக்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் இலங்கை அணி என எந்த அணிகளும் வெல்லாது. கடைசியில் வெல்லப் போவது ஒளிபரப்பாளர்கள்தான். அவர்கள்தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறார்கள்” என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.






