சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வீரரான பாபர் அசாமின் பேட்டிங் பங்களிப்பு குறிப்பிடப்படும் படி அமையவில்லை.
தனது மோசமான செயல்பாட்டால் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆக பேட்டிங் தொழில்நுட்பத்தில் விராட் கோலிக்கு நிகராக பேசப்பட்டவர் பாபர் அசாம். குறைந்த வருடங்களிலேயே தனது பேட்டிங் திறனை நிரூபித்து பாகிஸ்தான் அணியின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார். ஆனால் சமீப சில ஆண்டுகளாகவே அவரது பேட்டிங் திறன் கேள்விக்குள்ளாகி வருகிறது.
ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவத்தொடரிலும் மோசமான பங்களிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி தொடரிலும் மோசமாக விளையாடிய பாபர் நான்கு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தமாக 64 ரன்கள் மட்டுமே குவித்தார். முன்னணி வீரரான இவர் போன்ற வீரர்களின் மோசமான பேட்டிங் திறனால் பாகிஸ்தான் இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்து மோசமான வரலாறு பதிவு செய்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் பாபர் குறித்து பேசும் போது “நான் ஏன் பாபரை ஆதரிக்கிறேன் என்று எல்லோருமே கேட்கிறார்கள். நான் கொடுத்த ஆதரவினால் பாபர் 500 மதிப்பெண்கள் பெறுகிறாரா? அல்லது இவரை ஆதரிக்குமாறு நான் மக்களிடம் கேட்டேனா? கடந்த நான்கு வருடங்களாக பாபர் சிறந்த வீரராக திகழ்ந்திருக்கிறார் என்பது சந்தேகம் உள்ளதா? முக்கியமாக பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடுவதில்லை. ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவத்திலும் பாபர் முதல் மூன்று இடங்களுக்குள் இருந்துள்ளார்.
அவர் அதிக ரன்கள் அடித்திருக்கிறார். அவருக்கு நிகராக தற்போது அணியில் யாரும் இல்லை. சிறப்பாக விளையாடிய ஒரு வீரரை ஆதரிக்காமல் அவரை நீக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்களிடம் இருக்கும் சிறந்த வீரரை கொண்டு அவரை விளையாட வையுங்கள் பார்க்கலாம். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு தகுந்தவாறு பாபர் விளையாட வில்லை என்பது உண்மைதான். அதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
இதையும் படிங்க:இன்று துலீப் டிராபியில்.. இந்திய அணியில் 3 இடத்துக்கு மோதும்.. 7 வீரர்கள்.. முழு அலசல்
ஆனால் அவர் மட்டும்தான் நன்றாக விளையாடவில்லையா? மற்ற அணி வீரர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? பாபர் விளையாடாமல் போனால் அப்போது பாகிஸ்தான் அணியின் நிலை என்ன? என்று சல்மான் பட் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.