பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரராக திகழ்ந்த அகமது ஷெஷாத் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தான் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கான வித்தியாசமான காரணம் ஒன்றை தெரிவித்து இருக்கிறார்.
பாகிஸ்தான் வீரர் கூறிய வினோத காரணம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்த அகமது ஷெஷாத் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகள் 81 ஒருநாள் போட்டிகள் மற்றும் 59 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் பொருத்தவரை 982 ரன்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் 2605 ரன்களும், டி20 கிரிக்கெட் பொருத்தவரை 1471 ரன்கள் குவித்திருக்கிறார். இவரது பேட்டிங் பார்ம் ஓரளவுக்கு நன்றாக இருந்த போதிலும் 2019ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணியில் இருந்து முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்டார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அகமது ஷெஷாத் செய்தியாளர்கள் சந்திப்பில் தான் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான வினோதமான காரணம் ஒன்றை தெரிவித்தார். அதாவது தான் அழகாக இருந்ததாகவும் நன்றாக பேசத் தெரிந்தவராகவும் இருந்ததால் அணியில் உள்ள சீனியர் வீரர்களால் தான் வெறுக்கப்பட்டதாக சில வினோதமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அவர் கூறிய கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சீனியர் வீரர்களே வெறுத்தார்கள்
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நான் பொதுவாக அழகாக இருப்பது எனக்கு நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தியிருக்கிறது. எங்கள் துறையில் அழகாக தெரிந்தால், நன்றாக பேசத் தெரிந்தால், உடை நன்றாக அணிய தெரிந்தால் சிலர் உங்களை வெறுக்க ஆரம்பிப்பார்கள். இதனால் பாகிஸ்தான் அணியில் நான் ஒரு இலக்காக இருந்திருக்கிறேன். நான் மட்டும் இந்த பிரச்சனைகளில் சிக்கவில்லை மற்றவர்களும் இதே போன்ற சிக்கல்களில் சிக்கியுள்ளனர்.
இதையும் படிங்க:254 ரன் டார்கெட்.. குழி பிட்ச்சில் வெஸ்ட் இண்டீஸ் கலக்கல்.. பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் தடுமாற்றம்
உங்களுக்கான ரசிகர் பட்டாளம் அதிகரித்து மக்கள் உங்களை பாராட்ட தொடங்கினால் அணியில் உள்ள சீனியர் வீரர்களால் நீங்கள் வெறுக்கப்படுவீர்கள். அதை மூத்த வீரர்களால் ஏற்றுக் கொள்வது கடினம். நாங்கள் சிறிய பகுதியைச் சேர்ந்தவர்கள், நான் லாகூரில் உள்ள அனார்கலியில் வசித்து வந்தேன். எனக்கான அங்கீகாரம் கிடைத்ததும் என்னை அழகுப்படுத்தவும் என்னை மேம்படுத்திக் கொள்ளவும் முயற்சித்தேன். ஆனால் இது பாகிஸ்தான் அணிக்குள் சில பிரச்சனைகளை ஏற்படுத்தியது” என்று கூறி இருக்கிறார். 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் பாகிஸ்தான் அணியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.