பாகிஸ்தானின் முன்னாள் பயிற்சியாளர் மொஹ்சின் கான் பாபர் அசாம் உடன் ஒப்பிடும்பொழுது விராட் கோலி ஒன்றுமே கிடையாது வெறும் ஜீரோ எனக் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
தற்போது பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் மிகவும் சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்த அணி தொடர்ச்சியாக ஐசிசி தொடர்களில் செமி பைனலை எட்ட முடியாமல் வெளியேறிக் கொண்டிருக்கிறது. மேலும் அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் ஃபார்ம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் ஃபார்ம் மிகவும் மோசமாக இருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி நிறைய போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அணியின் நட்சத்திர வீரர் சரியாக விளையாடாமல் போகும் பொழுது எல்லா அணிகளுக்கும் உண்டாகும் சரிவு பாகிஸ்தான் அணிக்கும் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் முக்கியமான போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி உடன் பாபர் அசாமை ஒப்பிட்டு கிங் என அழைக்கக்கூடாது என்று வெளிப்படையாக கூறி வருகிறார்கள். விராட் கோலி உடன் ஒப்பிடுவதற்கு பாபர் அசாமுக்கு தகுதி இல்லை என்று கூறுகிறார்கள். இப்படியான நிலையில்தான் பாகிஸ்தான் முன்னாள் பயிற்சியாளர் மொஹ்சின் கான் இதற்கு நேர் எதிரான கருத்தை பேசி பரபரப்பை உருவாக்கி இருக்கிறார்.
இது குறித்து பேசி இருக்கும் மொஹ்சின் கான் ” நான் முதலில் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன் பாபர் அசாமுடன் ஒப்பிடும் பொழுது விராட் கோலி ஒன்றுமே கிடையாது அவர் வெறும் பூஜ்யம்தான். இங்கே யார் சிறந்த வீரர் என்பதை பற்றி பேசவில்லை. நான் பாகிஸ்தான் கிரிக்கெட் பற்றி பேசுகிறோம். இங்கு எதுவெல்லாம் அழிக்கப்பட்டு இருக்கிறது? திட்டமிடல்கள் இல்லை, யுத்திகள் இல்லை, தகுதி இல்லை, யாருக்கும் பொறுப்பும் இல்லை, பொறுப்பு எடுத்துக் கொள்வதும் இல்லை”
இதையும் படிங்க : 476 ரன் 69 விக்கெட்.. ரஞ்சி பைனலில் கேரளாவை வீழ்த்தி விதர்பா சாம்பியன்.. கருண் நாயர் கலக்கல்
“பாபர் அசாமை துவக்க ஆட்டக்காரர்களாக அனுப்ப சிந்தித்தது யார்? அவர் மூன்றாவது இடத்தில் விளையாடி ரன்கள் குவித்து சாதனையாளராக இருக்கிறார். இப்படி இருக்கும் பொழுது அவரை எந்த காரணத்திற்காக துவக்க வீரராக அனுப்ப வேண்டும்? முதலில் இப்படியான யோசனைக்கு பாபர் அசாம் மறுத்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த முடிவை எடுத்தது யார்? என்று தெரியவில்லை. இது மிகவும் மோசமான முடிவு” என்று கூறியிருக்கிறார்.