பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டிலிருந்து வீரர்களின் உடல் தகுதி பிரச்சனை பொதுமக்கள் வரையில் பேசும் பெரிய பிரச்சினையாக அந்த நாட்டில் மாறி வருகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பைத் தொடர் இரண்டிலும் பாகிஸ்தான் அணி மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணமாக வீரர்களின் உடல் தகுதி இருக்கிறது என்கின்ற விமர்சனம் எழுந்தது.
இது தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணியின் வீரர்களின் உணவு வரை விமர்சனம் செய்தார்கள். இதற்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் உடல் தகுதிக்கு சிறப்பு ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டது. ஆனாலும் கூட அதில் பெரிய அளவு முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கு முன்பாக இது குறித்து சல்மான் பட் கருத்து கூறியிருக்கிறார்.
இதுகுறித்து சல்மான் பட் பேசும்பொழுது ” பாகிஸ்தான் கிரிக்கெட்டில் உடல் தகுதியில் கூடிய விரைவில் முன்னேற்றம் காணப்படும். அதே சமயத்தில் அனைத்து வீரர்களும் உடல் தகுதியில் இல்லை என்று கூற முடியாது. முகமது ரிஸ்வான், ஃபகார் ஜமான் மற்றும் ஷான் மசூத் ஆகியோரை எடுத்துக் கொண்டால் உலக கிரிக்கெட்டில் சிறந்த ஃபிட்னஸ் இருக்கும் 10 வீரர்களில் இருப்பார்கள். அவர்கள் யோ யோ டெஸ்டில் சிறப்பாக இருந்தார்கள் மேலும் ஜிம்மிலும் நன்றாக உழைக்கிறார்கள்.
அதே சமயத்தில் உடல் தகுதியில் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு வளர்ச்சி இருக்கவில்லை. ஒட்டுமொத்த அணியாக பார்க்கும் பொழுது இந்த விஷயத்தில் பாகிஸ்தான் அணி பின்தங்கி இருக்கிறது.சில வீரர்கள் உடல் தகுதி விஷயத்தில் கடினமாக உழைத்த பொழுதும் கூட, மொத்த அணியாக இப்படி இருப்பதால் மக்கள் எல்லோரையும் விமர்சனம் செய்கிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் டன் கணக்கில் பாபர் அசாம் ரன்கள் குவித்தார். அவர் முதலில் மற்றும் இரண்டாவது என எப்பொழுது பேட்டிங் செய்தாலும் ரன்கள் எடுத்தார். விக்கெட்டுகளுக்கு இடையில் மிகச் சிறப்பாக ஓடினார். அவரது உடல் தகுதி நன்றாக இருந்தது. ஆனால் நடுவில் உடல் தகுதி காணாமல் போகிறது. இதுதான் பிரச்சினையாக மாறுகிறது.
இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணியில் பிளவு உண்மையா.. ஹர்திக்குக்கு அணியில் ஆதரவு இருந்ததா? – பும்ரா பதில்
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் வீரர்களின் உடல் தகுதி பற்றி பேசுகிறது. இது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒரு புயலை கிளப்பி இருக்கிறது. இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் தோல்வி ஏற்பட்டதும் வீரர்களின் உடல் தகுதி பற்றி மக்கள் பேச ஆரம்பித்தார்கள். இந்த நேரத்தில் அணியின் பயிற்சியாளர் மற்றும் பிசியோ ஆகியோரை கேள்வி கேட்காமல், நேராக ஜூனியர் மட்டத்தில் இருக்கும் பாகிஸ்தான் வீரர்களை உடல் தகுதி நோக்கி தள்ள ஆரம்பித்தார்கள். கூடிய விரைவில் மாற்றம் வர வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.