இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் வரிசையாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், பும்ரா குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
உலகின் நம்பர் ஒன் பவுலர்
தற்போதைய நவீன கால கிரிக்கெட்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக திகழ்கிறார். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் என மூன்று வடிவ கிரிக்கெட் தொடருக்கும் தகுந்தவாறு தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை வருவதற்கு முக்கிய பங்காற்றினார்.
மேலும் கடந்த டி20 உலக கோப்பையில், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட பும்ரா, குறிப்பாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி இறுதிப் போட்டியில் இறுதிக்கட்டத்தில் இரண்டு ஓவர்களை அற்புதமாக வீசி போட்டியை இந்தியா பக்கம் அப்படியே மாற்றினார். மேலும் அவர் கடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர், பும்ரா ஒரு முழுமையான பந்துவீச்சாளர் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.
மூன்று வடிவத்திலும் சிறந்த பவுலர்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” வேகப்பந்து வீச்சு பற்றி பேசினால் பும்ரா ஒரு முழுமையான வேகப்பந்து வீச்சாளர் என்று நான் நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடச் சொன்னால் அவர் புதிய பந்து, பழைய பந்து, அரை புதிய பந்து என எதுவாக இருந்தாலும் அதனைப் பயன்படுத்தி வீசுவார். அவரை ஒருநாள் அல்லது வேறு எந்த வடிவத்திலும் விளையாடி செய்யுங்கள். அணிக்கு எந்த சூழ்நிலையில் தேவைப்படும் போதெல்லாம் அவர் சிறப்பாக செயல்படுவார்.
இதையும் படிங்க:இந்த பிரச்னையை சரி செய்யலனா.. செமி பைனல்ல பெரிய ரிஸ்க் ஆயிரும் – இந்திய முன்னாள் மேலாளர் எச்சரிக்கை
டி20 போட்டிகளிலும் பும்ரா ஒரு முழுமையான பந்துவீச்சாளராக திகழ்கிறார். அவர் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். உலகின் சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா என்று நினைக்கிறேன். மற்ற பந்துவீச்சாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் ஏதேனும் ஒரு குறை இருக்கும். ஆனால் பும்ரா மூன்று வடிவங்களிலும் சிறப்பான ஒரு பந்துவீச்சாளர். அதனால் தான் அவர் உலகின் நம்பர் ஒன் பௌலராக திகழ்கிறார்” என்று பாராட்டி பேசி இருக்கிறார்.






