டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான இரண்டு தோல்விகளுக்கு பிறகு கனடா அணியை வீழ்த்தி தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இருப்பினும் பாகிஸ்தானின் செயல்பாட்டில் மகிழ்ச்சி அளிக்காததால் பாகிஸ்தான் அணி தனது ஆதரவை இழந்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் கூறியிருக்கிறார்.
டி20 உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பாக பாகிஸ்தான் அணியில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டு மிகவும் நம்பிக்கையுடன் காணப்பட்டது. அந்த நம்பிக்கையுடனேயே முதல் போட்டியை அமெரிக்க அணிக்கு எதிராக எதிர்கொண்டது. இருப்பினும் முதல் போட்டியில் சூப்பர் ஓவரில் முகமது அமீரின் ஒழுங்கற்ற பந்துவீச்சால் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி, அதன் பிறகு இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியதால் தோல்வி அடைந்தது.
இதனால் இனி அடுத்த சுற்றுக்கு பாகிஸ்தான் அணி முன்னேற வேண்டுமானால், கனடா அணிக்கு எதிரான போட்டியில் மிகப்பெரிய ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் குறைந்த ரன்கள் இலக்கை கூட இறுதி வரை போராடி இறுதியில் தான் வெற்றி பெற்றது. இதனால் தற்போது பாகிஸ்தான் அணி அடுத்து சுற்றுக்கு முன்னேறுமா? என்ற சந்தேகமும் நீடிக்கும் நிலையில், அணியின் ஒழுங்கற்ற செயல்பாட்டால் பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் ஆதரவை இழந்ததாக முகமது கைப் கூறி இருக்கிறார்.
இது குறித்து முகமது கைஃப் விரிவாக கூறும்பொழுது
“பாகிஸ்தானின் சமீபத்திய ஒழுங்கற்ற செயல்பாடுகளின் காரணமாக வீரர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவை இழந்து விட்டது போல் தெரிகிறது. அணியைச் சுற்றி ஒரு அமைதியற்ற தன்மை நிலவுகிறது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு அளிப்பதை ரசிகர்கள் நிறுத்திவிட்டனர். அணி பரவலான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் பெறுவது தெளிவாக தெரிகிறது.
முதல் போட்டியில் முகமது அமீரின் ஒழுங்கற்ற பந்துவீச்சு, அதிகமாக வீசப்பட்ட வைடு பந்துகள், மோசமான செயல் திறன் காரணமாக தோல்வி ஏற்பட்டுள்ளது. அடுத்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 119 ரன்கள் இலக்கை கூட அடிக்க முடியாமல் தோல்வியை தழுவினர். இருப்பினும் கனடாவை அடுத்த போட்டியில் வீழ்த்தும் போதும் அவர்களது முயற்சி பாராட்டத்தக்க வகையில் இல்லை.
இதையும் படிங்க:இந்தியா ஆஸிக்கு எச்சரிக்கையா?.. நாங்க இத செஞ்சா.. யாரும் எங்ககிட்ட நிக்க முடியாது – ஆப்கான் கோச் பேட்டி
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாபர் ஆஸம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் நிலையாக கிரிஸில் இருந்த போதிலும், அவர்களது வலுவற்ற பேட்டிங் தன்மையின் காரணமாக தோல்வியே தழுவி இருக்கின்றனர். இந்தியா, பாகிஸ்தான் என இரண்டுமே வெற்றிக்கு தயாராக இருந்தது. ஆனால் அழுத்தத்தின் கீழ் பாகிஸ்தான் அணி சிக்கிக் கொண்டதால் அதிலிருந்து மீள முடியவில்லை” என்று கைப் கூறியிருக்கிறார்.