இந்திய கிரிக்கெட்டில் மிகவும் சுயநலமற்ற வீரராக ராகுல் டிராவிட் பார்க்கப்படக்கூடியவர். வீரராக அணிக்கு பல வருடங்கள் உழைத்தவர் பிறகு அடிமட்ட இந்திய அணிகளில் இருந்து இந்திய தேசிய அணிக்கு பயிற்சியாளராகி டி20 உலகக்கோப்பையை வென்ற பயிற்சியாளராகவும் இருக்கிறார். இந்த நிலையில் இந்திய அணி நட்சத்திர வீரர்கள் குறித்து அவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி காலத்தில் இந்திய அணிக்கு புதிய விளையாட்டு கலாச்சாரம் உருவாக்கப்பட்டது. வீரர்கள் எந்த வித சுயநலமும் இல்லாமல் அணிக்காக தாக்குதல் பாணியில் விளையாட முடிவு செய்யப்பட்டு அதன்படி எல்லோரும் விளையாடினார்கள்.
மேலும் அணியினர் ஒரே குழுவாக எல்லா நேரமும் இருந்தார்கள். எந்த விஷயங்களும் தனித்தனியாக ஆலோசிக்கப்படாமல் ஒட்டுமொத்த குழுவும் ஒரே இடத்தில் அமர்ந்து பேசியது. இப்படி இந்திய கிரிக்கெட் அணியில் புதிய விஷயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது டி20 உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது.
இந்த நிலையில் இந்த விஷயங்களுக்கு எல்லாம் தன்னால் கிரெடிட் எடுத்துக் கொள்ள முடியாது எனவும், ரோகித் சர்மா மற்றும் அணியின் மூத்த வீரர்கள் தான் அணியை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்கள் எனவும் பல விஷயங்கள் தொடர்பாக மனம் விட்டு முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறும் பொழுது “இதற்கான கிரெடிட்டை என்னால் எடுத்துக் கொள்ள முடியாது. கேப்டன் தலைமையில் இருக்கும் மூத்த வீரர்கள்தான் அணியை இயக்குகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ரோகித் சர்மா உடன் இணைந்து பணியாற்றியது என்னுடைய பாக்கியம்.கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஒரு கேப்டனாக அவர் செயல்பட்டதில் மக்கள் அவரை நோக்கி ஈர்க்கப்பட்டார்கள். இதுஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்.
இதையும் படிங்க : ஆஸில பெட்ஷீட் மாத்தவே 5 மாடி ஏற வச்சாங்க.. ரகானே ரவி சாஸ்திரி சண்டை போட்டாங்க – ஷர்துல் தாக்கூர் பேட்டி
பல இந்திய வீரர்கள் சூப்பர் ஸ்டார்கள் ஆக இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் ஈகோ கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் அவர்களை நிர்வகிப்பது கடினம் என்றும் மக்கள் சில நேரங்களில் நினைக்கிறார்கள். இந்த இந்திய சூப்பர் ஸ்டார் வீரர்கள் தங்களுடைய தயாரிப்பு மற்றும் பணி நெறிமுறைகளில் மிகவும் அடக்கமான தாழ்மையாகச் செயல்பட கூடியவர்கள். இவர்களிடம் எந்த ஈகோவும் கிடையாது. இதனால்தான் இவர்கள் சூப்பர் ஸ்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.






