இந்திய அணியின் இடது கை ஆட்டக்காரரான ஷிகர் தவான் தற்போது சர்வதேச கிரிக்கட்டிலும், உள்ளூர் கிரிக்கெட்டிலும் தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது.
இந்த நிலையில் தவான் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவருக்கு இந்திய வீரர்களும், பல முன்னாள் வீரர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக் தவான் குறித்து முக்கிய கருத்து ஒன்றை கூறி இருக்கிறார்.
இந்திய அணியில் பல ஆண்டுகளாகவே நட்சத்திர அதிரடி தொடக்க ஆட்டக்காரரான ஷேவாக் 2013ம் ஆண்டிலிருந்து அவரது பேட்டிங் ஃபார்ம் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியது. இந்த நிலையில் ஏற்கனவே 2010ம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமான தவான் அந்த இடத்துக்காக காத்திருந்தார். இந்த நிலையில் 2013ம் ஆண்டு எம் எஸ் தோனி சேவாக்கை கழட்டிவிட்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தவானுக்கு வாய்ப்பை கொடுத்தார்.
அந்த இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்ட தவான் அந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தங்க பேட் விருதையும் வென்றார். அதற்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சேவாக்கின் பார்ம் சரியத் தொடங்கியது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சேவாக்கை கழட்டிவிட்ட தோனி பார்டர் கவாஸ்கர் டிராபி மூலம் 2013 ஆம் ஆண்டு தவான் அறிமுகமானார்.
தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே குறைந்த பந்துகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் படைத்தார். இப்படி ஷேவாக்கின் இடத்தை முழுமையாக ஆக்கிரமித்த தவான் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டுக்காக விளையாடியிருக்கிறார். இந்த நிலையில் தனது இடம் வீண் போகாமல் தவான் சிறப்பாக விளையாடியிருக்கிறார் என்று அவருக்கு வாழ்த்துக்களை சேவாக் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து சேவாக் விரிவாக கூறும்போது “மொகாலி டெஸ்டில் நீங்கள் என்னை மாற்றியதில் இருந்து நீங்கள் சிறப்பாக விளையாடி திரும்பி பார்க்காமல் முன்னோக்கிச் சென்றீர்கள். அங்கிருந்து பல ஆண்டுகள் சிறப்பாக விளையாடியிருக்கிறீர்கள். நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கவும், வாழ்க்கையை எப்போதும் அனுபவித்து முழுமையாக வாழவும் எனது வாழ்த்துக்கள்” என்று சேவாக் சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:பாகிஸ்தான் டெஸ்ட்.. பங்களாதேஷ் முஷ்பிகியுர் ரஹீம் வரலாற்று சாதனை சதம்.. பாக் சொந்த மண்ணில் சோகம்
தவான் கடைசியாக தனது கடைசி ஒரு நாள் போட்டியை 2022 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராகவும், தனது கடைசி டி20 போட்டியை 2021ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராகவும், தனது கடைசி டெஸ்ட் போட்டியை 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.