வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்த உடன் இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் திடீரென்று ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில் இரண்டாவது போட்டி வருகிற 10-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் வருகிற 19-ம் தேதி முதல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில் திடீரென்று ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் ஷுப்மான் கில் ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தனைக்கும் ரோஹித் சர்மா ஆறு மாதங்களுக்கு முன்பாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மாவை 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பைக்கு பரிசீலிக்கும் எண்ணம் இந்திய அணிக்கு இல்லை எனவும், அதனால்தான் இப்போதே அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் எனவும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபாக்கரீம் சில கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “நீங்கள் அவரை கேப்டனாக ஆக்கவில்லை என்றால் இன்னும் எதற்காக அவரை அணியில் வைத்திருக்கிறீர்கள்? அவரை எதிர்காலத்தில் ஒரு பகுதியாக நீங்கள் பார்க்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாக காட்டுகிறது. 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்காண இந்திய அணியில் அவர் இருக்க மாட்டார். அப்படியானால் அடுத்த உலகக் கோப்பைக்கு அவரைப் பார்க்கவில்லை என்றால் நீங்கள் அவரை அணியில் வைத்திருக்கக் கூடாது.
இதையும் படிங்க:கார்பரேட் நிறுவனம் போல் மாறிவிட்டது இந்திய அணி.. கோலி, ரோகித் குறித்து பேசிய சடகோபன் ரமேஷ்
அவர் ஒரு கேப்டனாக இருக்கிறாரா அல்லது ஒரு வீரராக இருக்கிறாரா என்பது எல்லாம் ஒரு பொருட்டல்ல. அதனால்தான் தேர்வாளர்கள் ரோகித் சர்மாவுடன் அவசரமாக செயல்பட்டார்கள். அதற்கான தேவை இப்போது இல்லை என்று நான் ஏற்கனவே கூறினேன். ஷுப்மான் கில்லை தற்போது உயர்த்தி டி20 அணியின் துணை கேப்டனாகவும் மாற்றி உள்ளீர்கள். இதன் மூலமாக அவர் எதிர்காலத்தில் மூன்று வடிவத்திலும் கேப்டனாக இருப்பார் என்று தெரிகிறது. அவர் தற்போது டெஸ்ட் அணியில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு நாள் தொடரில் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.






