இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடும் நிலையில் இதற்குப் பிறகு இதே அணிக்கு எதிராக டி20 தொடரையும் மேலும் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடுகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பராஸ் மாம்ப்ரே இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு இதற்குப் பிறகு வரிசையாக டெஸ்ட் தொடர்கள் இருப்பதால் பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டிகளும், அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகளும் விளையாட உள்ளது. இதில் தற்போது முன்னணி பந்து வீச்சாளர்களாக பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் மட்டுமே இருக்கின்றனர்.
முகமது சமி காயம் காரணமாக வெளியேறிய நிலையில் தற்போது அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் விளையாடுவாரா? என்பது சந்தேகமாகவே உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆகாஷ் தீப் ஆஸ்திரேலியா சூழ்நிலைகளில் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று அதற்குரிய காரணத்தை இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் பராஸ் மாம்ப்ரே கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “ஆகாஷ் தீப் உள்நாட்டு தொடர்களில் அதிக கிரிக்கெட் போட்டிகள் விளையாடி இருக்கிறார். எனவே என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாக புரிகிறது. மேலும் அவர் தனது பந்துவீச்சில் அதிகம் சீம் மொமண்டை நம்புகிறார். அதாவது பந்தின் தையல் பகுதியை அதிகமாக நம்பி வீசுகிறார். எனவே ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் அது போன்ற பந்துவீச்சாளர்கள் தான் தேவைப்படுவார்கள். அவரால் அங்கு தகுந்தவாறு செயல்பட முடியும்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாட விரும்பும் பும்ரா போன்ற ஒரு வீரரை பெற்றிருப்பது நமது அதிர்ஷ்டம். ஆனால் நீண்ட தொடருக்கு நடுவே பும்ரா மற்றும் ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்க வேண்டியது கட்டாயம். எனவே அப்போதுதான் இது போன்ற பந்துவீச்சாளர்கள் தேவைப்படுகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:விராட் கோலி தோனியின் ஸ்பெஷல் சாதனை.. ஹாரி புரூக் முறியடிப்பு.. இங்கிலாந்து ஆஸ்திரேலியா போட்டி
எனவே ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் ஆகாஷ் தீப் போன்ற பந்துவீச்சாளர் இந்திய அணிக்கு முக்கியமாக தேவைப்படுகிறார் என்று பராஸ் மாம்பரே கூறியிருக்கிறார். டெஸ்ட் தொடருக்கு ஆஸ்திரேலியா அணியும் கடுமையாக தயாராகி வருவதால் இந்த முறை இந்திய அணிக்கு இந்த போட்டித் தொடர் சவாலாக இருக்கும்.