நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இருப்பினும் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் செயல்பாடு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் விமர்சித்து பேசி இருக்கிறார்.
தர்மசாலாவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் எடுத்தது. இதில் கேப்டன் மார்கரம் சிறப்பாக விளையாடி 63 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் அனைத்து வீரர்களும் தங்களது சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தனர்.
அதற்குப் பிறகு பேட்டிங் களம் இறங்கிய இந்திய அணி ரன்கள் அதிகம் இல்லாததால் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் 35 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மா ஆட்டம் இழந்த பிறகு, அவருக்குப் பிறகு மூன்றாவது இடத்தில் கேப்டன் சூர்யா களம் இறங்கி இருக்க வேண்டும் என்று முகமது கைப் கருதுகிறார். பேட்டிங் ஃபார்ம் கவலைக்குரிய விதத்தில் இருக்கும்போது இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்று கருதுகிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “இன்று கேப்டன் சூர்யாவிற்கு மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற அருமையான வாய்ப்பு இருந்த நிலையில் சூர்யா மூன்றாவது இடத்தில் களமிறங்கியிருந்தால் 30 அல்லது 40 ரன்கள் எடுக்க அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கும். அவருக்கு சூழல் சாதகமாக இருந்திருக்கும் அவர் ஒரு திறமையான வீரர் அவரது திறமையை யாரும் கேள்வி கேட்கவில்லை.
இதையும் படிங்க:போன மேட்ச் எனக்கு மோசமான நாள்.. இந்த மேட்ச்ல நான் சரியா செஞ்ச விஷயம் இதுதான் – அர்ஷ்தீப் சிங் பேச்சு
அவர் ஒரு சிறந்த வீரர் என்பதால்தான் அவரது ஆட்டத்திறன் குறித்து கேள்விகள் எழுகின்றன. இன்னும் உலகக்கோப்பைக்கு சில போட்டிகளே இருக்கும் நிலையில் அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மீண்டும் ஃபார்முக்கு திரும்பி இருந்தால் அது இந்திய அணிக்கு நல்ல ஒரு தருணமாக இருந்திருக்கும். திலக் வர்மா மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்ட போது சூர்யா மீது கேமராக்கள் இருந்தன. நம்பிக்கை குறையும் போது தான் பேட்டிங் செய்ய இறங்கலாமா? அல்லது வேண்டாமா என்று தோன்றும். நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். அணிக்கு திரும்ப விரும்பினால் நீங்கள் ஓய்வறைக்கு சென்று மறைந்து கொள்ள முடியாது” என்று பேசி இருக்கிறார்.






