வருகிற 23ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மான் கில் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து 4வது டெஸ்ட்
25 வயதான இளம் இந்திய வீரர் சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது நடைபெற்றுள்ள மூன்று ஆட்டங்களில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது போட்டியைத் தவிர கடந்த இரண்டு ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் கில் எளிதாக வெற்றி பெற வேண்டிய மூன்றாவது போட்டியில் பேட்டிங்கில் சொதப்பினார்.
மேலும் மூன்றாவது போட்டியின் போது இங்கிலாந்து வீரர்களிடையே காரசாரமான விவாதத்தை அவர் வெளிப்படுத்தியதையும் காண முடிந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி சுப்மான் கில் இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியை நகலெடுக்க முயற்சிப்பதாக சில காட்டமான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். மேலும் அது போன்று ஆக்ரோசத்தை வெளிக்காட்டாமல் தனது சாதாரண பாணியிலேயே கேப்டன்ஷிப் பணியை தொடர வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார்.
காப்பி அடிக்க முயற்சி
இதுகுறித்து அவர் கூறும் போது “கேப்டன் கில் நடந்து கொள்ளும் விதம் எனக்கு பிடிக்கவில்லை. அவர் விராட் கோலியை நகலெடுக்க முயற்சிக்கிறார். அதன் விளைவாக அது அவரது பேட்டிங்க்கு உதவவில்லை. ஐபிஎல் தொடரில் அவர் கேப்டன் ஆனதிலிருந்து அவர் ஆக்ரோஷமான மனநிலைக்கு மாறி நடுவர்களுடன் உற்சாகமான உரையாடல்களில் ஈடுபடுவதை நான் கவனித்தேன். இது கில் போல் அல்லாமல் இருந்தது. அவர் அந்த வகையான ஆக்ரோசத்தை காட்ட வேண்டியது இல்லை.
இதையும் படிங்க:ஆச்சரியமா இருக்கு.. ஆளே அடையாளம் தெரியல.. 17 கிலோ எடை குறைத்த சர்பராஸ் கான்.. பீட்டர்சன் வாழ்த்து
எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கு கிடையாது. அவர் தனது ஆக்ரோஷமான பாணியை கடைபிடிக்க முடியும். ஆனால் அதற்காக எப்போதும் வாய்மொழி வாயிலாக வெளிப்படுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலம் அவர் தனது ஆக்ரோஷத்தை காட்டலாம். இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்திருக்க முடியும். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனிடம் இருந்து இத்தகைய ஆக்ரோஷம் நல்லது கிடையாது” என்று அவர் பேசி இருக்கிறார்.






