நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததன் மூலமாக ரசிகர்கள் மற்றும் முன்னாள் இந்திய வீரர்களிடமிருந்து மிகப்பெரிய விமர்சனங்கள் வந்த வண்ணமாக உள்ளன. தற்போது முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரியும் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
மழையால் குறுக்கிட்ட பெங்களூர் முதல் டெஸ்ட்டை இந்தியா தோல்வியடைந்த பின், திடீரென தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அவர் ரஞ்சி தொடரில் சிறப்பாக விளையாடியதும், நியூசிலாந்து அணியில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதாலும் சேர்க்கப்பட்டதாக பேசப்பட்டது. இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, இதுகுறித்து வித்தியாசமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக வாஷிங்டன் சுந்தரை இந்திய அணியில் சேர்த்தது, இந்திய அணியில் குழப்பங்களையும் சில விரிசல்களையும் ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “இந்திய அணியின் மிகப்பெரிய எதிரி பெங்களூரு வானிலை, ஏனெனில் ஏனெனில் அதுதான் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. டாஸ் வென்ற பிறகு இந்தியா ஃபீல்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவர்கள் ஏன் முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, பிரச்சனை அங்குதான் தொடங்கியது. முதலில், அவர்கள் அணித் தேர்வை தவறாகப் பயன்படுத்தினர், பின்னர் முதல் டெஸ்டில் தோல்வியடைந்த பிறகு, அவர்கள் மூன்று மாற்றங்களைச் செய்தனர்.
இந்திய அணியில் விரிசல்
மேலும் தொடர்ந்து பேசிய திவாரி “வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்தது ஒரு சிறப்பான விஷயம் என்று நீங்கள் நினைக்கலாம், அதற்குக் காரணம் குல்தீப் யாதவால் விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை என்பது கிடையாது. பேட்டிங்கில் இந்திய அணிக்கு இருந்த பற்றாக்குறையை அவர்கள் உணர்ந்தனர், எனவே, ஆல் ரவுண்டர் சுந்தரை அவர்கள் விரும்பினர். அதனால்தான் அவரை உள்ளே அழைத்துச் செல்ல இந்தியா தீர்மானித்தது”
“வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்ததின் மூலம், இது என்ன வழிவகுக்கும் என்றால் வரும் நாட்களில் அணியில் நிறைய குழப்பங்கள் இருக்கும், அணியில் விரிசல்கள் இருக்கும். உங்களிடம் ஏற்கனவே ஒரு சுழற்பந்து வீச்சாளர் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் இருக்கிறார், அவர் முன்பு சுழல் பந்திற்கு சாதகமான சூழ்நிலையில் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்”
இதையும் படிங்க: நீங்க ரோஹித் சர்மாவுக்கு செய்யறது நியாயமே கிடையாது.. முன்னாள் வீரர்களுக்கு ஷிகர் தவான் பதிலடி
“ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துவிட்டு இரண்டாவது டெஸ்டில் குல்தீப் யாதவையும் பெஞ்ச் செய்தீர்கள். நீங்கள் பெங்களூரில் ஆகாஷ் தீப்பை விளையாடவில்லை, ஆனால் இரண்டாவது டெஸ்டில் அவரைச் சேர்த்தீர்கள், அங்கு நீங்கள் அவருக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஒருமுறை கூட பந்து வீச கொடுக்கவில்லை. பிறகு நீங்கள் ஜஸ்பிரித் பும்ராவை வைத்து பவுலிங்கை தொடங்கவில்லை. இந்த எல்லா காரணமும் பின்வரும் காலங்களில் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்று சொல்லி முடித்துள்ளார்.