இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது வருகிற 20-ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. சுுப்மான் கில் தலைமையிலான இளம் இந்திய அணி வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் ஜாம்பவான் ஹர்பஜன் சிங் இந்தியா கேப்டன் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்
ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் திடீரென டெஸ்ட் பார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் விரைவாக நடைபெற இருந்த நிலையில் இவர்களது ஓய்வு சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் இது முன்னரே தீர்மானிக்கப்பட்டது தான் என செய்திகளும் வெளிவந்தது.
இந்த சூழ்நிலையில் கம்பீர் மற்றும் அகர்கர் குழு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுப்மான் கில்லை இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக நியமித்தனர். இந்த சூழ்நிலையில் இது குறித்து பேசி இருக்கும் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், எந்த ஒரு கேப்டனும் ஓரிரு மாதங்களில் உருவாகி விட முடியாது எனவும் அந்த இளம் வீரருக்கு அழுத்தத்தை கொடுக்காமல் அவர் முன்னேறி வர சிறிது காலம் கொடுக்க வேண்டியது அவசியம் என சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதை செய்ய வேண்டியது அவசியம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஒவ்வொரு கேப்டனுக்கும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் திறன் இருக்கிறது. கேப்டன்கள் 1-2 மாதங்களில் உருவாகி விடுவதில்லை. நீங்கள் கில்லுக்கு சிறிது நேரம் கொடுங்கள். அவர் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு உயர்வார், அவர் எப்படி முன்னேறி வருகிறார் என்பதை நீங்கள் காண்பீர்கள். மேலும் அவர் ஒரு கேப்டனாக எப்படி திறமையானவர் என்பதையும் நாம் காண முடியும்.
இதையும் படிங்க:WTC பைனல்.. எங்களை நினைச்சா வருத்தமா இருக்கு.. ஆஸியை ஜெயிக்க இனி இதுதான் ஒரே வழி.. தென் ஆப்பிரிக்க வீரர் பேட்டி
அவரை ஒரு பேட்டர், ‘கில் சஹாப் தி கிரேட்’ என்று நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி மீண்டும் சிறப்பாக செயல்படும் என்கிற நம்பிக்கை உள்ளது. கில் மற்றும் டீம் இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். இந்திய அணி ஒரு இளம் அணி ஆனால் வலிமையான அணி” என அவர் பேசியிருக்கிறார். கில் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இருப்பதும் நினைவிருக்கலாம்.






