“குறிச்சி வைச்சிக்கோங்க இந்தப் பையன் உலகத்துல நம்பர் 1 பவுலரா வருவான்” – ஸ்ரீகாந்த் சவால்!

0
4282
Srikanth

வெஸ்ட்இன்டீஸ் நாட்டில் நடக்கும் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பேன் கோட் நிறுவனம் வாங்கி வைத்துள்ளது. ஆனால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் வசதி இல்லாததால், மற்ற நாடுகளின் தொலைக்காட்சியோடு வியாபார ஒப்பந்தம் செய்துகொள்ளும். இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பும்!

தற்போது இந்த முறையில் வெஸ்ட்இன்டீஸ் இந்தியா மோதும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இந்தியாவின் தூர்தர்சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்துகொண்டு, இணையத்தில் பேன் கோட் செயலி மூலம் ஒளிபரப்பி வருகிறது.

- Advertisement -

இந்த பேன் கோட் செயலி மூலம் போட்டிகளை ஒளிபரப்பில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்களை வர்ணனைக்கு பணியமர்த்தப் பட்டிருக்கிறார்கள். இதில் ஸ்ரீகாந்த், ரவி சாஸ்திரி போன்ற பிரபல வர்ணனையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்!

இந்த பேன் கோட் ஒளிபரப்பில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஒரு முக்கிய கருத்த ஒன்றை ஆணித்தரமாக வெளியிட்டு இருக்கிறார். இவர் தடாலடியாகப் பேசக்கூடிய நபராக இருந்தாலும், இவரின் கணிப்புகள் பெரும்பாலும் தவறாது. இவர் தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த 2011 காலக்கட்டத்தில்தான் இந்திய அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது!

இவர் 23 வயதான இந்திய இளம் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் குறித்து முக்கியக் கருத்தொன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் “அர்ஷ்தீப் சிங் எதிர்காலத்தில் உலகின் நம்பர் 1 டி20 பவுலராக இருப்பார். இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்; அவர் நிச்சயம் டி20 உலகக்கோப்பை அணியில் இருப்பார். சேட்டன் சர்மா அர்ஷ்தீப் பெயரையும் தயவுசெய்து உலகக்கோப்பை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று நகைச்சுவையாகத் தேர்வுக்குழு தலைவருக்கு கோரிக்கையும் வைத்தார்.

- Advertisement -

இங்கிலாந்து டி20 தொடரில் அறிமுகமான அர்ஷ்தீப்பின் இறுதிக்கட்டா ஓவர் எகானமி 6.35 தான். இவர் சராசரியாக 13 பந்துகளுக்கு ஒருமுறைதான் பவுண்டரி தருகிறார். அதாவது ஒரு டி20 போட்டியில் இவர் இரண்டு பவுண்டரிகள்தான் தருகிறார். இவரது சிக்கனமான பந்துவீச்சு பல வீரர்களையும் கவர்ந்துள்ளது!

உதாரணமாக நடப்பு வெஸ்ட் இன்டீஸ் தொடரில் மூன்று ஆட்டங்களில் இறுதிக்கட்டத்தில் ஆறு ஒவர்களை வீசி வெறும் 34 ரன்களை மட்டுமே தந்திருக்கிறார். இது ஓவருக்கு ஆறு ரன் என்பதை விடக் குறைவு. டி20 என்றாலே அதிரடிதான்; அதிலும் இறுதிக்கட்ட ஓவர்கள் என்றாலே எல்லாப் பந்துகளையும் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கவே பார்ப்பார்கள். ஆனால் இப்படிப்பட்ட இடத்தில் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் அர்ஷ்தீப் சிங்!