இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக தயாராகி வருகிறது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணியும் முன்னிலை பெற விரும்புகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் தேர்வாளர் தேவங்க் காந்தி ரோஹித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியின் கேப்டனாக திகழும் ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலக அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்திய அணியை தலைமை தாங்கினார். பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டதோடு மட்டுமில்லாமல் கேப்டன் ஷிப்பிலும் அற்புதமாக செயல்பட்டு இந்திய அணி வெற்றி பெற காரணமாக அமைந்தார்.
மேலும் ரோகித் இல்லாத தொடக்க இடத்தை ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஜோடி அபாரமாக நிவர்த்தி செய்தனர். முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் விரைவாக ஆட்டமிழந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்த ஜோடி சிறப்பாக செயல்பட்டு 201 ரன்கள் முதல் விக்கெட்டுக்கு குவித்தது. எனவே ரோஹித் சர்மா இரண்டாவது ஆட்டத்தில் தொடக்க வீரராக கலமிறங்காமல் ஆறாவது வீரராக களம் இறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் தேவங்க் காந்தி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ரோஹித் சர்மா பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் வரவேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஐந்தாவது இடத்தில் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த காரணத்தால் இடது வலது காம்போவையும் அப்படியே பராமரிக்க முடியும். ஒரு மிடில் வரிசை பேட்ஸ்மேன் தனது கேரியரின் கடைசி காலத்தில் தொடக்க வீரராக களம் இறங்கினால் அது கடினமாகிவிடும்.
இதையும் படிங்க:கிரிக்கெட் மேல அன்பு மட்டும் பத்தாது.. பிரத்விஷா வீழ்ச்சிக்கு இதான் காரணம் – சிறுவயது கோச் பேட்டி
ஆனால் அதுவே ஒரு தொடக்க வரிசை பேட்ஸ்மேன் மிடில் ஆர்டரில் களமிறங்கி விளையாடுவது அவ்வளவு கடினமாக இருக்காது. குறிப்பாக இந்திய அணியில் ஆறாவது வீரராக களம் இறங்கும் ரோஹித்துக்கு இது கடினமாக இருக்காது” என்று அவர் கூறியிருக்கிறார். வழக்கமாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஆகியோர் தொடக்க ஜோடியாக களமிறங்கும் நிலையில் ராகுலை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற கோணத்தில் முன்னாள் தேர்வாளர் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.