இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான அணி தேர்வு இந்திய கிரிக்கெட் வாரியம், மும்மரமாக தயாரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் குறித்து இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து சில முக்கிய விஷயங்கள் பேசியிருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்
இந்திய கிரிக்கெட் அணி சமீப காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான நிலையை சந்தித்து வருகிறது. சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் அதற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் என இரண்டிலும் மோசமான தோல்விகளை சந்தித்து இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. இதற்கு அணியின் முன்னணி பந்துவீச்சாளராக கருதப்படும் முகமது சமி காயம் காரணமாக சுமார் இரண்டு வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை.
அவர் கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடினார். அதற்குப் பிறகு காயம் அடைந்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் இணைந்திருக்கும் அவர், சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஹைட்ரபாத் அணிக்காக ஒன்பது போட்டிகளில் விளையாடி ஆறு விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருக்கிறார். எனவே அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாதிப்பாரா? என்ற சந்தேகம் அனைவரது மத்தியிலும் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அவரது திறமை குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
முகமது சமி கட்டாயம் தேவை
இந்த விஷயம் குறித்து அவர் கூறும் போது “ஷமியை பற்றி நிறைய விஷயங்கள் நினைக்கலாம். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவர் நிறைய ரன்கள் விட்டுக் கொடுக்கிறார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியாக செயல்பட மாட்டார் என்று நினைக்கலாம். ஆனால் அது என்னை பொருத்தவரை தவறான விஷயமாகும். சிவப்புப் பந்தை பொருத்தவரை அதன் தையல் பகுதி சற்று நீண்டு இருக்கும். அதை ஆடுகளத்தின் மேற்பரப்பில் இருந்து அடிக்கும் போது ஷமி அதனை ஆறு அங்குலம் அதிகமாக மேல் எழுப்பச் செய்கிறார்.
இதையும் படிங்க:சுப்மான் கில் இல்லை.. நான் இந்தியனா இருந்தால் இங்கிலாந்து தொடருக்கு இவர்தான் கேப்டன் – மைக்கேல் வாகன் பேட்டி
மேலும் அந்த இயக்கம் காற்றில் அதிக அளவு ஊசலாடி பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. அதனால்தான் சமி ஒரு சிவப்பு பந்து வேகப்பந்துவீச்சாளராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளை வெல்பவர் ஆக இருக்கிறார்” என அவர் பேசியிருக்கிறார். இதனால் தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது தேவை இந்திய அணிக்கு கட்டாயம் தேவை எனவும் கூறி இருக்கிறார்.