இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா திரும்பி வந்ததும் அவருக்கு என்ன மாதிரியான இடத்தை கொடுக்க வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் டோட்டா கணேஷ் அதிரடியான கருத்தை முன் வைத்திருக்கிறார்.
தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிற காரணத்தினால் இந்திய கேப்டன் ரோகித் சர்மா விளையாட ஆஸ்திரேலியா வரவில்லை. இந்த நிலையில் துணை கேப்டன் பும்ரா அணியை வழி நடத்தி வருகிறார்.
பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் கேஎல்.ராகுல் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடாத காரணத்தினால் இந்திய டெஸ்ட் அணியில் பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மேலும் அவருடைய இடத்தை இளம் வீரர் சர்ப்ராஸ் கானுக்கு கொடுத்தார்கள்.
இந்த நிலையில் முதல் டெஸ்டில் கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் விளையாடாத காரணத்தினால் துவக்க இடத்தில் கேஎல்.ராகுல் அனுப்பப்பட்டார். இந்த நிலையில் முதல் இன்னிங்சில் சிறந்த தடுப்பாட்டம் விளையாடி 26 ரன்கள் எடுத்து சர்ச்சையான முறையில் ஆட்டம் இழந்தார். தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காமல் 63 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். இதனால் அவரை தொடர்ந்து தொடக்க இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என கோரிக்கைகள் வருகிறது.
தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ரோகித் சர்மா இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்புகிறார். அவர் சாதாரண வீரராக இருந்தால் பிளேயிங் லெவனில் எடுத்து வராமல் வெளியில் வைத்து ஓய்வுகொடுக்கலாம். ஆனால் அவர் கேப்டனாக இருக்கின்ற காரணத்தினால் வெளியில் வைக்க முடியாது என்பது பிரச்சினையாக மாறி இருக்கிறது.
இதையும் படிங்க : 172-0.. இந்திய ஓபனர்கள் புதிய உச்ச சாதனைகள்.. ஜெய்ஸ்வால் தனித்த மாஸ் ரெக்கார்டு.. பெர்த்தில் ஆதிக்கம்
இது குறித்து கர்நாடகா மற்றும் இந்திய முன்னாள் வீரர் டோட்டா கணேஷ் கூறும் பொழுது “இந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முழுவதிலும் கே.எல்.ராகுலை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்க வேண்டும். மீண்டும் கே.எல்.ராகுல் இடத்தை மாற்ற வேண்டாம். அவர் ஆஸ்திரேலியா சூழ்நிலையில் புதிய பந்தை சமாளிப்பதில் மிகச் சிறப்பானவர். ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் விளையாடட்டும். இந்த தொடக்க ஜோடி நிலைத்திருக்க வேண்டும். நான் கொஞ்சம் காமன்சென்ஸ் உடன் யோசிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.