இந்திய கிரிக்கெட் அணி நாளை பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் விளையாட உள்ள நிலையில் இந்த போட்டி குறித்து எதிர்பார்ப்பு இப்போதே ஆரம்பித்து விட்டது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அதுல் வாசன் இந்திய அணி தேர்வு குறித்த தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்.
இந்திய அணித் தேர்வு
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ள இந்திய அணி குறித்து 15 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிடும் போது சர்ச்சைகளும் கூட இருந்தது. இந்திய அணியின் அனுபவ வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ் வெளியேற்றப்பட்டு கொல்கத்தா அணியில் விளையாடிய ஹர்ஷித் ராணா உள்ளே கொண்டுவரப்பட்டார். இந்த நிலையில் இறுதியாக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக ஐந்தாவது சுழற்பந்துவீச்சாளராக வருண் சக்கரவர்த்தி உள்ளே கொண்டுவரப்பட்டார்.
மேலும் கே.எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரில் கேஎல் ராகுலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கேஎல் ராகுல் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடினார். அதாவது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளுக்கு கம்பீர் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் நிலையில் அவருக்கு விருப்பமான வீரர்களை இந்திய அணிக்குள் கொண்டு வந்து விளையாட வைக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் அதுல்வாசன் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
கம்பீரின் சொந்த அணி
இதுகுறித்து வாசன் விரிவாக கூறும்போது “வங்கதேச அணி 35/5 என்ற நிலையில் இருந்த போது அவர்களை 228 ரன்கள் வரை எடுக்க அனுமதித்தீர்கள். இதுவே வங்கதேச அணிக்கு பதிலாக வேறு ஒரு பெரிய அணி இதை செய்திருந்தால் நிச்சயமாக இந்திய அணி தோற்றுப் போய் இருக்கும். கௌதம் கம்பீர் தனது சொந்த அணியை தேர்வு செய்கிறார். ரிஷப் பண்ட் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடாதது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இது ஏன் நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.
இதையும் படிங்க:இந்தியா பாக் போட்டி குறித்து தப்பான கருத்தை யார் சொன்னது.? கொஞ்சம் ரசிகர்களை கவனிங்க – சுப்மான் கில் கருத்து
ரிஷப் பண்ட் ஒரு புத்திசாலித்தனமான வீரர். அவரைப் பார்த்து மற்ற அணிகள் பயப்படுகிறது. ஏனென்றால் அவர் தனியாக போட்டிகளை வெல்லக்கூடிய திறமை படைத்தவர். இது எதிரணிக்கு நிச்சயமாக தெரியும்” என்று கூறியிருக்கிறார். கே எல் ராகுல் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து அவருக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது என கேப்டன் ரோகித் சர்மா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






