ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூரியவன்ஷி தேவையில்லாமல் தவறான ஷாட் செலக்ஷன் செய்து விக்கெட்டை இழந்து அவுட் ஆனது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது கவலையையும் ஆலோசனையையும் தெரிவித்துள்ளார்.
இந்த பரபரப்பான போட்டியில் 15 வயதான இடதுகை பேட்ஸ்மேன் வைபவ் சூரியவன்ஷி 2 சிக்ஸர்களுடன் 8 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். ஆனால் சாய்ம் அயூப் வீசிய 3வது ஓவரில் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.
இந்திய அணி பவர் பிளேயில் விக்கெட்டுகளை இழந்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 61 ரன்களும், இறுதியில் திலக் வர்மா 22 பந்துகளில் 51 ரன்களும் விளாசினர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவரில் 211 ரன்கள் குவித்தது. பதிலுக்கு ஆடிய பாகிஸ்தான் 192 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் இந்தியா தங்கம் வென்றது.
வைபவ் சூரியவன்ஷி அவுட் ஆனது குறித்து தனது யூடியூப் சேனலில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்போது, “அது வைபவ் சூரியவன்ஷி ஆட வேண்டிய ஷாட்டே அல்ல, அவர் ஏன் அதை ஆடினார்? வைபவ் ஏன் அவ்வளவு அவசரப்பட்டார் என்று தெரியவில்லை, அவர் ஏற்கனவே இரண்டு சிக்ஸர்கள் அடித்திருந்தார், அவர் பொறுமையாக காத்திருந்து நேரம் எடுத்து ஆடியிருக்க வேண்டும், என்னைப்போல ஆடாதீர்கள், நீங்கள் ஒரு பெரிய பிளேயர் மற்றும் வருங்காலத்தில் லெஜண்டுகளுக்கெல்லாம் லெஜண்டாக மாறப்போகிறவர்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா பேட்டிங் குறித்து அவர் தொடர்ந்து பேசும்போது, “ஸ்லோ டர்னிங் விக்கெட்டுக்கு ஏற்றபடி அபிஷேக் சர்மா அற்புதமாக அட்ஜஸ்ட் செய்து பேக் ஃபுட்டில் ஆடினார், ஆனால் வைபவ் ஃப்ரண்ட் ஃபுட்டிலேயே கவனமாக இருந்தார், அதேபோல இறுதியில் திலக் வர்மா ஒரு சூப்பர் பிளைண்டர் இன்னிங்ஸ் ஆடி போட்டியை முடித்து வைத்தார், பேட்டிங் செய்ய எளிதாக இல்லாத இந்த விக்கெட்டில் திலக் வர்மாவின் இந்த இன்னிங்ஸை நான் மிகவும் உயர்வாக மதிப்பிடுகிறேன்” என்று கூறி இருக்கிறார்.






