இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வருகிற புதன்கிழமை நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கௌதம் கம்பீரின் திட்டம் குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்.
கம்பீர் செய்வது நியாயமற்றது
இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் ஆன முதல் இரு ஒரு நாள் போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது. இந்திய அணி வெற்றி பெற்றாலும் பேட்டிங் ஆர்டர் சிறிது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஒரு நாள் போட்டிகளில் ஐந்தாவது இடத்தில் களமிறங்கி வந்த கேஎல் ராகுல் தற்போது 6வது இடத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.
ஆல் ரவுண்டர் பட்டியலில் களம் இறங்கும் அக்ஷார் பட்டேல் ஐந்தாவது இடத்திற்கு ஏற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் கேஎல் ராகுல் கடந்த இரண்டு போட்டிகளில் 2 மற்றும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இடது வலது காம்பினேஷன் வேண்டும் என்று நினைத்தால் தொடக்கத்தில் விளையாடும் நான்கு வீரர்கள் வலது கை ஆட்டக்காரர்களாகவே இருப்பது ஏன் என்று இந்திய முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் சில காட்டமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
கேஎல் ராகுலுக்கு மட்டும் ஏன் இப்படி?
இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “ஸ்ரேயாஸ் ஐயர் நல்ல பார்மில் இருக்கிறார். இது இந்திய அணிக்கு நல்ல விஷயம் ஆனால் கேஎல் ராகுலுக்கு இது மோசமான விஷயம் என்று நினைக்கிறேன். அக்சார் பட்டேல் 30 மற்றும் 40 ரன்கள் அடித்திருந்தாலும் கே.எல் ராகுலுக்கு இந்திய அணி நிர்வாகம் செய்வது சரியல்ல. அவரது இடத்தை பாருங்கள், ஐந்தாவது இடத்தில் அற்புதமான சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். அவரது நிலை குறித்து இந்திய நிர்வாகம் என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை அவர் 6வது, 7வது இடத்தில் களமிறங்கினால் குறைவான ரன்கள் தான் எடுப்பார்.
இதையும் படிங்க:ரொம்ப வேதனையா இருக்கு.. ஜெயிச்சாலும் இதுல இந்திய அணியின் பலவீனம் தெளிவா தெரியுது – ஆகாஷ் சோப்ரா கருத்து
இது அவருக்கு செய்வது நியாயமற்றது. கம்பீர் செய்வது சரியல்ல, சூழ்நிலையை பொறுத்து அக்சார் பட்டேலை ஐந்தாவது இடத்தில் அனுப்பி இருக்கலாம் ஆனால் அது ஒரு நிலையான உத்தியாக இருக்க முடியாது. நீங்கள் தொடர்ந்து இது போன்ற மாற்றங்களை செய்தால் முக்கியமான போட்டியில் அது அனைத்தும் சிதைந்து போகும். இடது வலது காம்பினேஷன் பற்றி பேசி அதை நியாயப்படுத்த முடியாது. அப்படியானால் முதல் நான்கு இடங்களில் இடது வலது காம்பினேஷன் குறித்து உங்களுக்கு அக்கறை இல்லையா? அது ஏன் ஐந்தாவது இடத்தில் மட்டும் தேவைப்படுகிறது” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.






