பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்த தொடருக்கு இந்திய அணி தயாராவது குறித்து தனக்கு இருக்கும் முக்கியமான கவலை ஒன்றை இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியிருக்கிறார்.
ரோஹித் சர்மா தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை தற்பொழுது இலங்கை அணிக்கு எதிராக இரண்டுக்கு பூஜ்ஜியம் என இந்திய அணி இழந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் ரசிகர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.
மேலும் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரவேற்கின்ற நேரத்தில் இந்திய அணி தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கும் இலங்கை அணிக்கு எதிராக தொடரை இழந்து இருப்பதால், மேற்கொண்டு இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
கேப்டன் ரோஹித் சர்மா தங்களுடைய வீரர்கள் துணிச்சலான முறையில் விளையாடவில்லை என வெளிப்படையாகவே விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். அதே சமயத்தில் இந்தத் தோல்வி பெரிய கவலைப்பட வேண்டிய விஷயம் இல்லை எனவும், இதில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகளை பார்க்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் வாசிம் ஜாபர் இந்திய அணி பற்றி கூறும்பொழுது “இலங்கை அணி சிறப்பாக விளையாடியது. அவர்கள் இந்த தொடரை வெல்வதற்கு தகுதியானவர்கள். இந்திய அணி ஒரு தொடரை இழந்தது பற்றி எனக்கு எந்த கவலையும் கிடையாது. வெற்றி மற்றும் தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதியாகும். ஆனால் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : இந்தியா வந்து.. இதனால ஜெய்ஸ்வாலை பார்த்து ஏமாந்தேன்.. ஸ்டோக்ஸ்க்கு நான் தலைவலி இல்ல – போப் பேட்டி
அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்கு இந்தியாவிற்கு வருகிறது. அதில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு மூன்று ஒருநாள் போட்டிகள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.