அவரை உலகக்கோப்பை திட்டத்தில் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? – இந்திய அணி நிர்வாகத்தை விளாசிய ஸ்ரீகாந்த்!

0
149
Srikanth

இன்று மாலை, ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை, இந்திய தேர்வுகுழு அறிவித்தது. ஆசியக்கோப்பை அணியில் இருந்து இதில் பெரிதான மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆனால் அதே சமயத்தில் ஆசிய கோப்பை தோல்வி இந்திய அணி நிர்வாகத்தின் திட்டத்தை கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறது.

ஆசியக்கோப்பையில் ஏற்பட்ட தோல்வியால் அணியில் இருந்த ஆவேஸ் கான் நீக்கப்பட்டு இருக்கிறார். காயத்தால் ஆசியக்கோப்பையில் விளையாடாத பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் அணிக்கு திரும்பி வந்திருக்கிறார்கள். மேற்படி 15 பேர் கொண்ட அணியில் புதிதாக எந்த மாற்றங்களும் இல்லை.

அதே சமயத்தில் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்ட நான்கு பேரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி இடம் பெற்றுள்ளார். இவருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணியில் வாய்ப்பு தரப்படவில்லை. கடந்த ஆண்டு யுனைடெட் அரபு எமிரேட்டில் நடந்த டி20 உலக கோப்பையோடு இந்திய டி20 அணியில் இருந்து தள்ளி வைக்கப் பட்டார்.

தற்போது இவர் உலகக் கோப்பைக்கான ரிசர்வ் வீரராக இடம்பெற்றதோடு, உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளோடு டி20 தொடரில் விளையாட இருக்கிறது; அந்தத் தொடரில் 15 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்து இருக்கிறார். இதில் அவருக்கு வாய்ப்புகள் விளையாட தரப்படும் என்று நம்பப்படுகிறது.

மொத்தம் 17 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆனால் இவர் ஒரு ஓவருக்கு 9.54 ரன்களை விட்டு தந்து இருக்கிறார். இதுதான் கவலைக்குரிய ஒரு அம்சமாக அவரது டி20 பந்துவீச்சில் இருக்கிறது. அதே சமயத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாடிய இவர் மொத்தம் 16 ஆட்டங்களில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். குறிப்பாகப் புதிய பந்தில் எடுத்ததும் மூன்று ஓவர்கள் வீசிய இவர் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். இதனால் இவரை ஆசியக் கோப்பையிலேயே சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து அது நிராகரிக்கப்பட்ட பொழுது பெரிய விமர்சனமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு ரிசர்வ் வீரராக முகமது சமி இடம்பெற்றுள்ளது குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரரும் இந்திய தேர்வு குழுவின் முன்னாள் தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது கருத்தை வழக்கம்போல் வெளிப்படையாகத் தைரியமாக வைத்திருக்கிறார்.

இது பற்றி அவர் கூறும் பொழுது “முகமது சமி 15 பேர் கொண்ட அணியில் இருந்து இருக்க வேண்டும். நீங்கள் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் விளையாடுகிறீர்கள். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அவரால் பவுன்சை பெறமுடியும். அவருக்கு ஹை ஆர்ம் ஆக்சன் உள்ளது. அவர் இடது கை பேட்ஸ்மேனுக்கு பந்தை வெளியே கொண்டு போவார், வலதுகை பேட்ஸ்மேனுக்கு பந்தை உள்ளே கொண்டு வருவார். முதலில் அவர் மூன்று ஓவர்கள் வீசினால் அவரால் இரண்டு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய ஸ்ரீகாந்த் “அவரை ஏன் 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யவில்லை? உங்களிடம் வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கலாம். ஆனால் சமிதான் உங்களின் நான்காவது வேகப்பந்து வீச்சாளர். அவர் ஆஸ்திரேலியாவில் எல்லா நேரத்திலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறார். உங்களது உலகக்கோப்பை திட்டத்தில் அவர் இல்லை என்று உங்களால் எப்படி சொல்ல முடியும்? அவருடைய ஐபிஎல் சாதனைகளைப் பாருங்கள். அவர் ஆரம்ப விக்கெட்டுகளை மிக அருமையாக பெற்றிருக்கிறார். ஆரம்பத்தில் விக்கெட்டுகள் தேவையா? தேவை என்றால் யார் தருவார்?” என்று காட்டமாக இந்திய தேர்வு குழு விமர்சித்திருக்கிறார்.