இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார். மற்ற வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வினை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக தனது பெயரை முன் பதிவு செய்த காரணம் குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் விளக்கிக் கூறியிருக்கிறார்.
42 வயதில் ஐபிஎல் ஆசை
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தாங்கள் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை சில தினங்களுக்கு முன்பாக வெளியிட, இதன் மெகா ஏலம் இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள கிட்டத்தட்ட 1,500க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கள் பெயரினை முன்பதிவு செய்து இருக்கிறார்கள்.
இதில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் நட்சத்திரவேக பந்துவீச்சாளராக திகழ்ந்த 42 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐபிஎல் தொடரில் விளையாட தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். இதுவரை ஒரு ஐபிஎல் தொடரில் கூட விளையாடாத ஆண்டர்சன் முதல்முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக தனது பெயரை பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 704 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜாம்பவானாக திகழ்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் தான் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்தை ஒருபோதும் அனுபவித்ததில்லை என்பதால் ஒரு வீரராக இன்னும் கொடுக்க விரும்புகிறேன் என்று கூறி இருக்கிறார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறும் காரணம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் இன்னும் விளையாட முடியும் என்று நினைக்கும் ஏதோ ஒன்று எனக்குள் நிச்சயமாக இருக்கிறது. நான் இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடியது இல்லை. அதன் அனுபவம் எப்படி இருக்கும் என்று ஒருபோதும் கண்டதில்லை. பல காரணங்களுக்காக நான் ஒரு வீரராக இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று ஆண்டர்சன் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:வெற்றியோ தோல்வியோ.. ரோகித்கிட்ட அந்த ஒரு விஷயம் மாறவே மாறாது.. நானும் அதை கத்துகிறேன் – சூரியகுமார் பேட்டி
தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 42 வயதாகி வருவதால் அவரை ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இருப்பினும் ஒரு வேகப்பந்துவீச்சாளரின் தேவை ஒவ்வொரு அணிக்கும் முக்கியம் என்பதால் அதிலும் ஆண்டர்சன் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால் இவரை நிச்சயம் ஏதாவது ஒரு அணி தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இவர் எந்த அணிக்காக விளையாடுவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.