உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றி இருக்கும் நிலையில் அடுத்ததாக பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது விரைவில் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரீம் ஸ்வான் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை இழந்து தோல்வியடைந்தது. இந்த சூழ்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணியை வீழ்த்தி சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி வெற்றி பெற அனைத்து விதங்களிலும் போராடும். மேலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி என்ற இரு பெரிய ஜாம்பவான்கள் இல்லாத நிலையில் இங்கிலாந்து அணிக்கு இது ஒரு சாதகமான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரீம் ஸ்வான், இந்திய டெஸ்ட் தொடரை நாங்கள் ஒரு பயிற்சி தொடராக மட்டுமே பார்ப்போம் எனவும், நாங்கள் இதற்கு அடுத்ததாக விளையாட உள்ள ஆசஸ் டெஸ்ட் தொடருக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
இதுகுறித்து ஸ்வான் விரிவாக பேசும் போது “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது ஆஷஸ் தொடருக்கு முன்பாக ஒரு சிறந்த பயிற்சி தொடராக இருக்கும் என்று நான் கருதுவேன். இந்தத் தொடர் ஆனது ஒரு பெரிய தொடர். கடந்த இரண்டு முதல் மூன்று முறை நாங்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த போது தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டோம். எனவே இப்போது எங்கள் சொந்த மண்ணில் போட்டி நடைபெற உள்ளதால் நாங்கள் இந்திய அணியை வெல்ல வேண்டும். நாங்கள் இந்த தொடரில் நன்றாக விளையாட வேண்டும். அவர்களுக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருமே இருக்கப் போவதில்லை.
இதையும் படிங்க:டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் இடத்தை நிரப்ப இவரால் மட்டுமே முடியும்.. அந்தத் திறமை நிறைய இருக்கு – இந்திய முன்னாள் வீரர்
அவர்கள் இருவரும் இல்லாவிட்டாலும் சிறந்த வீரர்களும் இந்திய அணியில் இணைந்துள்ளனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் நிலைமைகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ளக் கூடிய சிறந்த பந்துவீச்சாளர்கள் எங்களிடத்தில் இருக்கிறார்கள். இங்கிலாந்து அணி இந்த தொடரை வெல்ல வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. மேலும் அவர்கள் இதை நம்பத் தகுந்த வகையில் வெல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். 4-1, 3-2 என்ற வகையில் வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்” என அவர் கூறியிருக்கிறார்.