நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி அதில் 4 வெற்றி மற்றும் 5 தோல்விகள் என புள்ளிகள் பட்டியலில் தற்போது ஆறாவது இடத்தில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே செய்யும் தவறுகள் குறித்து முன்னாள் சிஎஸ்கே கிரிக்கெட் வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இனி அடுத்ததாக நடைபெற உள்ள ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகள் வெற்றி பெற்றாக வேண்டும். மேலும் கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றாலும் நிலையான அணியை தேர்வு செய்து தொடர்ந்து விளையாடுவதில் தடுமாறுகிறது.
இதில் கிட்டத்தட்ட 28 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட இரண்டு இந்திய இளம் வீரர்களான கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் முந்தைய போட்டியில் களம் இறங்கினார்கள். இதில் கார்த்திக் சர்மா மட்டும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து சிஎஸ்கே அணிக்கு வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். இந்த சூழ்நிலையில் கடந்த சில போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த சுழற் பவுலர் அகில் ஹுசேனை தேர்வு செய்யாமல் சிஎஸ்கே மூன்று பவுலர்களுடன் விளையாடுகிறது.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே முன்னால் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் குறிப்பிடும் போது “சிஎஸ்கே அணியினர் வீரர்களை அவர்களது இயல்பான ஆற்ற நிலைக்கு ஏற்றவாறு களம் இறக்குவதாக எனக்கு தெரியவில்லை. மாறாக அவர்களைப் பெரும் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்பதற்காகவே அவர்களை விளையாட வைப்பது போல தோன்றுகிறது. இது மிகவும் தவறான ஒரு நடவடிக்கையாகும். அவர்கள் உரிய செயல்முறையை பின்பற்றுவது இல்லை என்பது தெளிவாகிறது.
சிஎஸ்கே வெற்றி பெற்றது என்பதற்காகவே அவர்கள் மேற்கொண்ட ஒவ்வொரு தேர்வு முறையும் சரியானது என்று கூறிவிட முடியாது. மும்பை அணியை தோல்வியடைய வைத்த போதிலும் சிஎஸ்கே அணி தேர்வு திருப்திகரமாக இல்லை. அகில் ஹுசேனால் ஏன் இன்னும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார் என்று தெரியவில்லை. ஐபிஎல் தொடரில் இதற்கு முன் ஒருமுறை கூட பந்து வீசாத பிரசாந்த் வீர் ஐந்தாவது ஓவரை வீசுகிறார். அகில் இருக்கும் போது இவருக்கு ஏன் பிளேயிங் லெவனில் இடம் கொடுத்து ஐந்தாவது ஓவரை வீசவைக்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.






