ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில் அதற்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது தீவிரமான முறையில் தயாராகி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்காதது குறித்து கருத்து தெரிவித்திருந்த சுனில் கவாஸ்கருக்கு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆரோன் பின்ச் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி வருகிற 22ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது மனைவியின் மகப்பேறு காலத்தால் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கு பெற மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே பங்கு பெற மாட்டார் எனவும் அடுத்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக திரும்பவும் அணியில் நுழைவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், பிசிசிஐ தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர் ஒரு கேப்டன் இல்லாமல் தொடரை தொடங்க முடியாது என ரோஹித் சர்மாவிடம் முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். தேவைப்பட்டால் 5 டெஸ்ட் போட்டிகளுக்கும் பும்ராவே கேப்டனாக செயல்படலாம் என்று கூறியிருப்பதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆரோன் பின்ச் சுனில் கவாஸ்கரின் கருத்தை ஏற்கவில்லை.
இது குறித்து அவர் கூறும் போது “நான் சுனில் கவாஸ்கர் கூறிய கருத்துக்கு முற்றிலுமாக உடன்பட மாட்டேன். ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன். உங்கள் மனைவிக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்றால் நீங்கள் அவருடன் இருக்க வேண்டும் என்றால் இது ஒரு அழகான தருணமாக இருக்கும். இந்த நேரத்தில் அதற்கு தேவையான அனைத்து நேரத்தையும் எடுத்துக் கொள்வது சிறப்பானது” என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: 23 ரன் 8 விக்கெட்.. ஆப்கானின் புதிய ஸ்பின் சூப்பர் ஸ்டார் கலக்கல்.. பங்களாதேஷ் அணி படுதோல்வி.. முதல் ஒருநாள் போட்டி
வருகிற 22 ஆம் தேதி இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் பும்ரா இந்திய அணிக்கு தலைமை தாங்குவார் என்று தெரிகிறது. இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் மிகவும் முக்கியம். ஏனென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் மற்றும் சில சர்வதேச அணிகளின் முடிவைப் பொறுத்து இந்திய அணியின் இறுதி போட்டி முடிவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.