நேற்று முன்தினம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் பல கோடி இந்தியர்களின் உலகக் கோப்பை கனவை முடித்து வைத்து ஆஸ்திரேலியா அணி அதிர்ச்சி அளித்தது.
நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இந்திய அணி நிச்சயம் கைப்பற்றும் என்று பல கோடி கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நம்பியிருந்தார்கள்.
காரணம் இந்திய அணி இந்த தொடர் முழுக்க விளையாடிய விதம் அசாத்தியமான ஒன்றாக இருந்தது. அணியில் இடம் பெற்ற எல்லா வீரர்களும் நல்ல சிறப்பான ஃபார்மில் இருந்தார்கள். மூன்று துறைகளும் இந்திய அணியில் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
குறிப்பாக இந்திய வீரர்களின் மனநிலை மிகுந்த நம்பிக்கையோடும் தைரியமாகவும் காணப்பட்டது. அவர்கள் ஆட்டத்தை அச்சமின்றி எதிர்கொண்டார்கள். இந்திய அணிக்கு முக்கிய போட்டிகளில் மனநிலைதான் சமீப காலங்களில் ஒரு பிரச்சனையாக இருந்து வந்தது.
இப்படி இந்திய அணி எல்லாவற்றிலும் பலமாக இருந்தது மட்டும் இல்லாமல், உள்நாட்டிலும் விளையாடியது பெரிய சாதகமாக இருந்தது. இப்படி நிலைமைகள் இந்திய அணிக்கு சாதகமாக இருந்த நிலையில் தான் ஆஸ்திரேலியா அணியில் வீழ்த்தி எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
குறிப்பாக இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா வீரர்கள் களத்தடுப்பில் காட்டிய வீரியம் அபாரமாக இருந்தது. அவர்கள் முதல் சில ஓவர்களிலேயே நான்கைந்து பவுண்டரிகளை தடுத்து அசத்தினார்கள்.
மிகக்குறிப்பாக 37 வயதான ஆஸ்திரேலியாவின் மூத்த வீரர் டேவிட் வார்னரின் களச் செயல்பாடு பிரமிக்கத்தக்க வகையாக இருந்தது. அவருக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை என்பதாலும், டிசம்பர் மாதத்துடன் ஓய்வு பெறுவதாக கூறியிருப்பதாலும், சக்திக்கு மீறி தன்னை வெளிப்படுத்தி விளையாடினார்.
இதுகுறித்து ட்விட்டரில் ஒருவர் அவரை குறிப்பிட்டு ” டியர் வார்னர் நீங்கள் மில்லியன் கணக்கான இதயங்களை உடைத்து விட்டீர்கள்” என்று சோகமாக குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக திருப்பி ரீ ட்வீட் செய்த டேவிட் வார்னர் “நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு சிறந்த விளையாட்டு மற்றும் சூழ்நிலை நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. உண்மையில் இந்தியா ஒரு தீவிரமான நிகழ்வை நடத்தியது. உங்கள் அனைவருக்கும் நன்றி!” என்று கூறியிருக்கிறார்!
I apologise, it was such a great game and the atmosphere was incredible. India really put on a serious event. Thank you all https://t.co/5XUgHgop6b
— David Warner (@davidwarner31) November 20, 2023