ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா பந்து வீச வராதது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என ஆஸ்திரேலிய வீரர் ஹெட் தெரிவித்திருக்கிறார்.
இரு அணிகளுக்கும் இடையே ஆன ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பும்ராவுக்கு முதுகு பகுதியில் வலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அவருக்கு முதுகு பகுதியில் பிடிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
மீண்டும் உருவான எதிர்பார்ப்பு
இந்த நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. ஆடுகளமும் பந்து வீச்சுக்கு சாதகமாக காணப்பட்டது. எனவே பும்ரா பந்துவீச்சில் ஏதாவது மேஜிக் செய்து, இந்திய அணியை வெல்ல வைத்து தொடரை சமன் செய்து, பார்டர் கவாஸ்கர் தொடரை தக்க வைப்பார் என இந்திய ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உருவானது.
இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளில் பும்ரா பந்துவீச்சுக்கு வர முடியவில்லை. சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் தங்களால் முடிந்தவரை பெரும்பாலான ஓவர்களை வீசினார்கள். ஆஸ்திரேலியா அணி நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து, இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் மூன்றுக்கு ஒன்று என கைப்பற்றியது.
பும்ரா வராததில் மகிழ்ச்சி அடைந்தோம்
இந்த தொடரில் பும்ரா மொத்தம் பத்து இன்னிங்ஸ் பந்து வீசி 32 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இவருடைய ஆவரேஜ் 13, ஸ்ட்ரைக் ரேட் 28 என நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது. இது மற்ற இந்திய பந்துவீச்சாளர்களை விட இரண்டு மடங்கு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரே தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
இதையும் படிங்க: சில பேர் எங்களால முடியாதுனு சொன்னாங்க.. ஆனா ரோகித் பும்ராவுக்கு ரொம்ப நன்றி – பேட் கம்மின்ஸ் பேட்டி
இதுகுறித்து டிராவிஸ் ஹெட் கூறும்பொழுது “இன்று பும்ரா பந்துவீச வரவில்லை என்பதில் எங்கள் தரப்பில் 15 பேர் மகிழ்ச்சியடைந்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பும்ரா ஒரு வித்தியாசமான ஆட்டக்காரர் அவருக்கு சிறந்த சுற்றுப்பயணம் அமைந்திருக்கிறது. நான் மிகவும் களைப்பாகி விட்டேன். அடுத்த 10 நாட்களுக்கு நான் என்ன செய்வேன் என்று தெரியவில்லை. நான் என்னை கவனித்துக் கொண்டு இலங்கை சுற்றுப்பயணத்திற்கு தயாராகி விடுவேன்” என்று கூறியிருக்கிறார்.






