தோனியுடன் இது குறித்து பேச நீண்ட நாட்களாக முயன்றும் முடியவில்லை ; இன்று பேச முடியுமென்று நம்புகிறேன் – ராகுல் திவாட்டியா

0
712
MS Dhoni and Rahul Tewetia

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனில் 62வது போட்டியில், மும்பையின் வான்கடே மைதானத்தில், மகேந்திர சிங் தோனியின் சென்னை அணியும், ஹர்திக் பாண்ட்யாவின் குஜராத் அணியும் தற்போது பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

சென்னை அணி ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பை இழந்திருக்க, குஜராத் அணியோ யாரும் எதிர்பார்க்காத வகையில், ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்து, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இவர்கள் மோதும் இந்த ஆட்டம் புள்ளி பட்டியலில் எந்தவித தாக்கத்தையும் உருவாக்காது என்றாலும், சென்னை அணிக்கான இரசிகர்களின் ஆதரவு மைதானத்தில் அமோகமாக இருக்கிறது.

- Advertisement -

சென்னை அணி இந்த ஆட்டத்திற்கு எப்போதும் இல்லாத வகையில் நான்கு மாற்றங்களோடு களமிறங்கி இருக்கிறது. உத்தப்பா, அம்பதி ராயுடு, பிராவோ, தீக்சனா நீக்கப்பட்டு, இவர்களுக்குப் பதிலாக ஜெகதீசன், பிரசாந்த் சோலங்கி, மதிஷா பதிரணா, சான்ட்னர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் பிரசாந்த் சோலங்கி, மதிஷா பதிரணா இருவரும் அறிமுகமாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் அணித்தரப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸில் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பகல் ஆட்டம் என்பதால் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார்.

குஜராத் அணியில் பேட்டிங்கில் மிடில்-ஆர்டரே கிடையாது என்கின்ற விமர்சனம் இருந்த போது, அந்தக் குறையை பினிசர்கள் மிகச்சிறப்பாகத் தீர்த்து வைத்திருக்கிறார்கள். அதிலும் ராகுல் திவாட்டியாவின் பங்கு இதில் பெரியது. இந்த ஆட்டம் துவங்குவதற்கு முன், ராகுல் திவாட்டியா சில விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் “நீண்ட நாட்களாக நான் மஹி பாயுடன் பேச விரும்பினேன். ஆனால் நடக்கவில்லை. இன்று அவருடன் பேச எப்படியும் வாய்ப்பு கிடைக்குமென்று நம்புகிறேன். என் பினிசிங் திறமையை மேம்படுத்துவது குறித்தும், கிரிக்கெட் தொடர்பாகவும் அவருடன் பேச வேண்டும். நான் இயல்பில் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன். ஆனால் கொஞ்சம் பேசிப் பழகிவிட்டால், நன்றாக கலந்துவிடுவேன்” என்று கூறியிருக்கிறார்!