ஹர்திக் பாண்டியா இல்லை.. இந்த இந்திய ஆல்ரவுண்டர் தான் அடுத்த பெரும்புள்ளியாக வருவாரு; முன்னாள் விக்கெட் கீப்பர் புகழாரம்!

0
147

இந்திய அணியில் நிச்சயம் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக ஷ்ரதுல் தாகூர் உருவெடுப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் சென்ற இந்திய அணி விளையாடிய மூன்று ஒருநாள் போட்டிகளையும் கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. முதல் இரண்டு போட்டிகள் முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்தாலும் மூன்றாவது போட்டி பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. ஸ்ரேயாஸ் ஐயர், கில் போன்றோர் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக விளையாடினர். 

- Advertisement -

இரண்டாவது போட்டியில் அக்சர் பட்டேல் அபாரமான பங்களிப்பை கொடுத்து இந்தியாவின் வெற்றி பெறச் செய்தார். முதல் போட்டியில் தவான் மூன்று ரன்களில் சதம் வாய்ப்பை நழுவவிட்டார். அதேபோல் இத்தொடரில் சிறப்பாக பந்து வீசிய சகல் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவே அதிகபட்சமாக இருக்கிறது. இவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருள் ஆனது. 

சகல் அளவிற்கு மிகச் சிறப்பாக பந்து வீச்சில் ஆல்ரவுண்டர் தாக்கூர் இந்த தொடரில் பேசப்படவில்லை. இவரும் ஏழு விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்த இவர் 10 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். அவருக்கு போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். 

இந்நிலையில் தாகூர் பற்றி பேசிய முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரிம் கூறுகையில், “கிடைத்த வாய்ப்புகளில் அவரால் பேட்டிங்கில் சரியாக விளையாட முடியவில்லை என்றாலும் பந்துவீச்சில் மிகச்சிறப்பாக செயல்பட்டார். பேட்டிங் திறமை அவரிடம் நிறையவே இருக்கிறது. அதை அணி நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த இடத்தில் அவர் களம் இறங்குவார் என்பதை உறுதியாக கூறிவிட்டால் பேட்டிங்கில் குழப்பம் இருக்காது. 

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் தன்னை நிரூபித்திருக்கிறார். தென் ஆப்பிரிக்கா மைதானத்திலும் நன்றாக விளையாடினார். இந்த மூன்று நாடுகளிலும் இவர் பந்துவீச்சிலும் அபாரமாக செயல்பட்டது அனைவரும் அறிவோம். நிச்சயம் அணியினர் இவரிடம் இருந்து அதிகபட்ச செயல்பாடு எதிர்பார்க்க வேண்டும். டி20 உலக கோப்பைக்கு ஹர்திக் பாண்டியா உடன் இவரும் மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வரலாம். ராகுல் டிராவிட் மற்றும் இதர பயிற்சியாளர்கள் இவரை சரியாக பயன்படுத்த வேண்டும் எனக் கருதுகிறேன்.” என்றார்.