சமீபத்தில் டி20 உலக கோப்பையில் கலந்து கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அதில் மோசமான தோல்விகளை சந்தித்து லீக் சுற்றிலேயே வெளியேறியது. இத்தனைக்கும் 2011ஆம் ஆண்டு இந்திய அணி ஒரு நாள் உலகக் கோப்பையை வெல்ல உதவிய பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் தற்போதைய பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் பயிற்சியாளருக்கும், அணி வீரர்களுக்கும் இடையேயான புரிதல் குறித்து பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் நஷீம் ஷா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பொதுவாகவே வெளிநாட்டு பயிற்சியாளர் அதிகமாக விரும்பும். வெளிநாட்டு பயிற்சியாளரை நியமித்தால் தமது அணி செயல்திறனில் அதிக நிலைப்பாடு கொண்டதாக இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்புகிறது. ஆனால் அது தற்போதுள்ள பாகிஸ்தான் அணிக்கு பொருந்துமா என்றால் நஷீம் ஷாவின் கூற்றுப்படி அது பொருந்த வாய்ப்பில்லை.
ஏனென்றால் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆங்கிலம் என்பது ஒரு சிலரைத் தவிர சரளமாக பேசவோ அல்லது புரிந்து கொள்ளவோ சற்று சிரமமாக இருக்கும். ஆனால் வெளிநாட்டு பயிற்சியாளர்களுக்கு ஆங்கிலம் தவிர வேறு மொழி தெரியாது என்பதால் அவர்கள் ஆங்கிலத்திலேயே பாகிஸ்தான் வீரர்களோடு உரையாட வேண்டியது இருக்கும். இதனால் பயிற்சியாளர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை பாகிஸ்தான் வீரர்களால் புரிந்து கொள்ள முடியாது என்று நசீம் சா கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நீங்கள் சொல்வது சரிதான். இங்கு மொழி தடை பிரச்சினை உள்ளது. சில வீரர்கள் அதனை எளிதாக புரிந்து கொள்கிறார்கள். ஆனால் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை சரியாக மொழிபெயர்த்து கூற ஒருவர் தேவை.சில விஷயங்கள் உங்களால் வெளிப்படையாக கூற முடியாமல் தனியாக மட்டுமே பேச முடியும். அப்போது மொழி பெயர்ப்பாளர் ஒருவரை கூட்டிச் சென்றுதான் ஆக வேண்டும்.
உங்கள் மொழியில் மற்றவருக்கு புரிய வைப்பது என்பது சற்று கடினமான விஷயமாகும். மேலும் காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் எனக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பணிச்சுமை குறித்து எந்த திட்டமும் வழங்கவில்லை. ஆனால் காயத்திற்கு பிறகு திரும்பி வருவது என்பது அவ்வளவு எளிதல்ல என்பதை நான் அறிவேன். எத்தனை பயிற்சி போட்டிகளில் விளையாடினாலும் சர்வதேச போட்டியில் விளையாடும் போது அந்த அனுபவம் வேறாக இருக்கும்.
இதையும் படிங்க:ரோஹித் மட்டும் ஆடினா போதுமா?.. யாரும் சரியில்லை.. இப்ப இந்தியா இதத்தான் செய்யணும் – முகமது ஷமி கருத்து
நமது உடல் அழுத்தத்திற்கும் உடல் சுமைக்கும் வித்தியாசம் உள்ளது. என் தரப்பில் இருந்து நான் தயாராக அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டு வருகிறேன். இதை என்னால் செய்ய முடியும். இருந்தாலும் காயத்திற்கு பிறகு உங்கள் பந்துவீச்சு சுமை அதிகமாகும் போது அதை நிர்வகிப்பது கடினமாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்