இலங்கை அணி தற்போது தங்கள் சொந்த நாட்டில் இந்திய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் வித்தியாசமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் மட்டுமே இருக்கும் பொழுது தமிழ் வீரர் ஒருவர் இலங்கை அணிக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.
நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுவதுமாகக் கைப்பற்றியது. இந்த மூன்று போட்டிகளிலும் பேட்டிங்கில் மிக நல்ல நிலையில் இருந்து கடைசி ஐந்து ஓவர்களில் கடைசி ஐந்து ஓவர்களில் மிக மோசமாக விளையாடி இலங்கை அணி தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்தத் தொடருக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் இருந்து நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்கள் துஷ்மந்த சமீரா, லுவல் துசாரா மற்றும் பினுரா பெர்னாடோ ஆகிய மூவரும் காயத்தால் அடுத்தடுத்து வெளியேறியது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை உருவாக்கியது.
இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டியின் போது ஃபீல்டிங் செய்யும் பொழுது இலங்கை அணியின் மிக முக்கியமான நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரனா தோள்பட்டையில் காயமடைந்தார். மேற்கொண்டு அவர் அந்த போட்டியில் ஒரு ஓவர்கூட பந்து வீசவில்லை. தற்போதும் அவர் நாளை தொடங்க இருக்கும் முதல் ஒருநாள் போட்டிக்கு தயாராகவில்லை என்று தெரிகிறது.
இதன் காரணமாக இலங்கையின் கண்டியை சேர்ந்த 29 வயது வலதுகை வேகப்பந்துவீச்சாளர் தமிழர் முகமது சிராஸ் மதிஷா பதிரனா இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பதிரனா காயத்தை பொறுத்து இவருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இலங்கை அணியில் சமீபத்தில் வியாஸ்காந்த்க்கு அடுத்து இன்னொரு தமிழ் பேசும் வீரர் இணைந்து இருப்பது அங்குள்ள தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது.
முகமது சிராஸ் பந்துவீச்சு உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமாராக இருந்த போதிலும் கூட ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக இருந்திருக்கிறது. அவர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் உள்நாட்டில் 47 போட்டிகளில் விளையாடி 80 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அவருடைய பந்து வீச்சு சராசரி 17.52 என மிகச் சிறப்பாக இருக்கிறது.
இதையும் படிங்க : 2019 உலகக்கோப்பை.. என் மனது வலித்த தருணம் அது.. நான் இதை செய்யாதனாலதான் மீண்டு வர முடிஞ்சது – தோனி பேட்டி
மேலும் நேற்று அவர் இலங்கை அணிக்குள் கொண்டு வரப்படும் முன் தான் விளையாடும் பிஆர்சி அணிக்காக குருநாகல் ஒய்சிசி அணிக்கு எதிராக 21 ரன்கள் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றி தன்னுடைய சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருந்தார். இந்தச் சிறப்பான செயல்பாடு அவரை இலங்கை அணிக்குள் கொண்டு வந்திருக்கிறது. 21 வயதில் முதல் தர கிரிக்கெட்டை ஆரம்பித்த அவருக்கு எட்டு வருடங்கள் கழித்து இலங்கை அணியில் இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது!






