நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆறு போட்டிகளை தோற்று பிளே ஆப் சுற்று வாய்ப்பை ஏறக்குறைய இழந்து வருகிறது. இந்த நிலையில் அந்த அணியில் பிளவு ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வேகமாக பரவி வருகின்றன.
தற்போது அந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். இவருக்கு முன்பாக இலங்கையின் லெஜெண்ட் குமார் சங்கக்கரா தலைமை பயிற்சியாளராக இருந்து அணியை மிகச் சிறப்பாக உருவாக்கி வழி நடத்தினார். இந்த நிலையில் புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பொறுப்பின் கீழ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கேப்டன் பதவிக்கான போட்டிகள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் ஜெய்ஸ்வால் தனக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்க வேண்டும் என ஏற்கனவே அணி நிர்வாகத்திடம் கேட்டிருந்ததாகவும், ஏலத்திற்கு முன்பாக ஆர்சிபி மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணி நிர்வாகங்களிடம் இதற்காக பேசியதாகவும், இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் அவருக்கு துணை கேப்டன் பொறுப்பு தருவதாகவும், சஞ்சு சாம்சனுக்கு நிகரான சம்பளம் தருவதாகவும் கூறி அணியில் தக்க வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக கையில் ஏற்பட்டு இருந்த காரணத்தால் சஞ்சு சாம்சன் இம்பேக்ட் பிளேயராக விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படியான சூழ்நிலையில்தான் துணை கேப்டன் பொறுப்பு கொடுப்பதாக சொல்லப்பட்ட ஜெய்ஸ்வால் கேப்டனாக நியமிக்கப்படாமல், ரியான் பராக் கேப்டனாக கொண்டுவரப்பட்டார். இது ஜெய்ஸ்வாலை அதிருப்தி அடைய வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ரியான் பராக்கின் செல்வாக்கு
அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பங்குகளை வைத்திருக்கும் ரியான் பராக் உறவினர் ரியான் பராக்கை எப்படியாவது கேப்டனாக கொண்டு வந்து விட வேண்டும் என்று முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே சஞ்சு சாம்சன் முழு உடல் தகுதி பெற்றிருந்த போதிலும் கூட இம்பேக்ட் பிளேயராக ஆரம்பத்தில் விளையாட வைக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க : SRHக்கு போட்ட ஸ்கெட்ச் கிடையாது.. சிஎஸ்கேவுக்கு மும்பை கொண்டுவரும் ஸ்பெஷல் வியூகம் – கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரியான் பராக்கை கேப்டனாக கொண்டு வரும் முயற்சியில் புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆதரவு கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அணியில் பிளவு ஏற்பட்டு உள்ளதாகவும், சஞ்சு சாம்சன் தனித்து விடப்பட்டு இருக்கிறார் என்றும் இதனால் வெல்ல வேண்டிய போட்டிகளை எல்லாம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது. இது தற்பொழுது ஐபிஎல் வட்டாரத்தில் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறது!






