இந்த ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இயன் மார்கன்? – கசிந்த தகவல்!

0
114

பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இங்கிலாந்தின் முன்னாள் வீரர் இயன் மார்கன் உட்பட இன்னும் சிலரை அணுகியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே, 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் அனில் கும்ப்ளே இரு தரப்பும் மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து கொண்டது. வருகிற செப்டம்பர் மாதத்துடன் மூன்று மாத கால ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது.

- Advertisement -

கும்ப்ளே ஒப்பந்தத்தை நீட்டிக்க பஞ்சாப் அணி நிர்வாகம் முன்வரவில்லை. ஏற்கனவே பஞ்சாப் அணி நிர்வாகம் புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. புதிய பயிற்சியாளர் பதவிக்காக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயன் மார்கன், இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் டிரேவர் பெல்லிஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஒருவர் என சிலரிடம் பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் அணுகியதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

இதுகுறித்து நம்ப தகுந்த வட்டாரத்திலிருந்து வெளிவந்த தகவல்படி, “பஞ்சாப் அணி அனில் கும்ப்ளேவின் ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை. அவரது செயல்பாடு திருப்தியளிக்கவில்லை. வருகிற செப்டம்பர் மாதத்துடன் ஒப்பந்தம் முடிவடைகிறது. ஏற்கனவே பஞ்சாப் அணி புதிய பயிற்சியாளரை நியமிக்க தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதில் இயன் மார்கன், பேலிஸ் மற்றும் இன்னொரு இந்திய பயிற்சியாளர் என சிலரின் பெயர்கள் இருக்கின்றன. இந்த மூவரில் ஒருவர் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியிடப்படும். குறிப்பாக ஆசிய கோப்பை தொடர் முடிவுற்ற பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்படலாம்.” என்று நம்பத் தகுந்த தரப்பில் இருந்து தகவல்கள் வந்துள்ளது.

அனில் கும்ப்ளே தலைமையில் பஞ்சாப் அணி 42 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 19 போட்டிகளில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. நடந்து முடிந்த மூன்று சீசனிலும் பஞ்சாப் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் ஏழு வெற்றிகள் மட்டுமே பெற்று ஆறாவது இடத்தை பிடித்தது. ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டண், ஷிகர் தவான் போன்ற பல வீரர்கள் இருந்தபோதிலும் அந்த அணியால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை என்பதால் கூட இத்தகைய முடிவை அணி நிர்வாகம் எடுத்திருக்க கூடும்.

- Advertisement -

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு முதல்முறையாக ஒரு நாள் போட்டிக்கான உலக கோப்பையை பெற்று தந்த மார்கன், இரண்டு மாதங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பயிற்சியாளர் பொறுப்பில் போதிய அனுபவம் இல்லை என்றாலும் இளம் பயிற்சியாளர்களை அணியில் எடுப்பதற்கு பஞ்சாப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.