“இந்த இந்திய வீரர் பாகிஸ்தான் அணியில் இருந்தால் போதும்” – முன்னாள் பாகிஸ்தான் வீரர் எதிர்பார்ப்பு!

0
66
Aaqip Javed

யுனைடெட் அரபு எமிரேட்டில் தற்போது நடந்து வரும் 15ஆவது ஆசியக் கோப்பை தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து இரண்டாம் சுற்றுப் போட்டிகள் நேற்று ஆரம்பித்தது. இந்தப் போட்டியில் இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் இலங்கை அணி அபாரமாய் 175 ரன்களை துரத்தி வெற்றி கண்டது.

இதையடுத்து விடுமுறை நாளான இன்று ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் மிகப்பெரிய போட்டி நடக்க இருக்கிறது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்லும் என்று பலராலும் கணிக்கப்பட்ட அணி இந்த இரண்டு அணிகள்தான் என்பதால், பலம் வாய்ந்த இரண்டு அணிகள் மோதிக்கொள்ளும் இந்த போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு செல்வது எளிது. எனவே இந்தப் போட்டி மிகக் கடுமையாகவே இருக்கும்.

இந்திய அணியின் பாகிஸ்தான் அணியுடனான முதல் போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வெளியே வைக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக அணியில் சேர்க்கப்பட்டார். பேட்டிங்கில் இவரது இடத்தை ரவீந்திர ஜடேஜா நிரப்பினார். அடுத்து ஹாங்காங் அணியுடனான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரிஷப் பண்ட் அணிக்குள் வந்தார். ஆனால் அவர் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக பேட்டிங்கில் வந்த ஸ்பின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தற்பொழுது முழங்கால் காயத்தால் தொடரை விட்டு வெளியேறி இருக்கிறார். இதனால் இவரை பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் நிரப்பக் கூடிய ஒரு வீரர் அல்லது இரண்டு வீரரோ பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணியில் இருந்தாக வேண்டும். அதே சமயத்தில் ஹர்திக் பாண்டியா திரும்ப வருவார். இன்று நடக்கும் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணியில் குறைந்தது இரண்டு மாற்றங்களாவது இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

தற்பொழுது நடக்க இருக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணியோடு ஒப்பிட்டு முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆகிப் ஜாவித் சில முக்கியமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய ஒப்பீட்டில் பாகிஸ்தான் அணியை விட இந்திய அணி சிறந்ததாக இருக்கிறது.

இதுபற்றி அவர் பேசும்பொழுது “பாகிஸ்தான் டி20 போட்டிகளில் வளர வேண்டுமென்றால் அவர்கள் ஹர்திக் பாண்டியா போல ஒரு ஆல்ரவுண்டரை கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் டி20 போட்டிகளில் உங்களிடம் எத்தனை ஆல்ரவுண்டர் இருக்கிறார்கள் என்பது தான் வெற்றியை அதிகப்படியாய் தீர்மானிக்கும். இந்திய அணிக்கு ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா இருப்பதைப் போல அது ஒரு நன்மை. இதுதான் பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவில் இருந்து விடுபட்ட ஒரு முக்கிய அம்சம் ” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” பாகிஸ்தானுக்கு வேகப்பந்து வீச்சு என்பது இயல்பான திறமையாக இருக்கிறது. வேகப்பந்து வீச்சுக்கு நல்ல உயரம் வேண்டும். பாகிஸ்தானில் பஞ்சாப் பெல்டில் சில இயற்கையான வேகப்பந்து வீச்சிற்கு தேவையான திறமைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். எங்களின் பேட்டிங் வரிசை தான் எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக நான் உணர்கிறேன். இந்த அணியில் நீங்கள் சோயப் மாலிக் மற்றும் ஷான் மசூத் ஆகியோரை வைத்து இருந்தால் கிடைக்கும் ஐந்து பேட்டர்கள் இந்திய அணியை எதிர்கொள்ள மிகச்சரியாக இருக்கும் ” என்று கூறினார்!